தென்தமிழ்நாட்டில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 18 மாவட்டங்களில் லேசானது முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மதியம் முதலே வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், திடீரென சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது.
குறிப்பாக திருவாரூர், கங்களாச்சேரி, ஆண்டிப்பந்தல், மாங்குடி, அம்மையப்பன் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ததால், பொது மக்களும் தற்போது சம்பா சாகுபடிக்கு தயாராகி வரும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதுபோல, நெல்லை மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்த நிலையில், இன்று (ஆக்.26) பிற்பகல் 3 மணி அளவில் திடீரென நெல்லை நகர்ப்பகுதிகளில் கருமேகங்கள் திரண்டு இடி மின்னலுடன், நெல்லை பகுதியிலுள்ள, பாளையங்கோட்டை, ஜங்ஷன், டவுன், வண்ணாரப்பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 45 நிமிடம் கனமழை கொட்டியது.
இதனால் சாலையில் ஆங்காங்கே தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி இருந்ததினால், வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். மேலும் கடும் வெயிலுக்கு இடையே பெய்த கன மழையால் நெல்லை மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:'அடையாற்றில் பாதிய காணோம்' - பசுமை தீர்ப்பாயத்தில் மனு!