தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவாரூர் அருகே ஆசிரியர் தாக்கியதில் செவித்திறன் இழந்த அரசுப் பள்ளி மாணவர்! - திருவாரூர் மாவட்ட செய்திகள்

Tiruvarur news: திருவாரூர் அருகே அரசுப் பள்ளி மாணவரை ஆசிரியர்கள் தாக்கியதில் காது (செவித்திறன்) பாதிக்கப்பட்டு, மாணவர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல்சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஆசிரியர் தாக்கியதில் செவித்திறன் இழந்த மாணவன்
ஆசிரியர் தாக்கியதில் செவித்திறன் இழந்த மாணவன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 8, 2023, 8:16 AM IST

Updated : Dec 8, 2023, 9:12 AM IST

ஆசிரியர் தாக்கியதில் செவித்திறன் இழந்த அரசுப் பள்ளி மாணவர்

திருவாரூர்: நன்னிலத்தை அடுத்த பாவட்டக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமையன் என்பவரது மகன் பிரகதீஸ்வரன் (14). இவர் நெடுங்குளம் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த நவம்பர் 21ஆம் தேதி பிரகதீஸ்வரன் தனது வகுப்பறையில் சக மாணவர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது, பள்ளியின் உதவி தலைமை ஆசிரியராக இருந்த ராதாகிருஷ்ணன் என்பவர், மாணவர்கள் தன்னை கேலி செய்ததாகக் கூறி பிரகதீஸ்வரனை அழைத்து, பிவிசி பைப் மற்றும் இரும்பு ராடு ஆகியவற்றால் கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் மாணவர் பிரகதீஸ்வரனுக்கு கை, கால், தோள்பட்டை மற்றும் காது ஆகிய இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து மாணவர் பிரகதீஸ்வரன், தலைமை ஆசிரியர் எழிலரசனிடம் புகார் அளித்துள்ளார். ஆனால், தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியருக்கு ஆதரவாகப் பேசி, பிரகதீஸ்வரனை அடித்து தாக்கியதாக பாதிக்கப்பட்ட மாணவர் தரப்பில் கூறப்படுகிறது.

அதனை அடுத்து, தனக்கு நடந்தவற்றை தனது உறவினர்களிடம் கூறியுள்ளார். பின்னர் பாவட்டகுடி பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் மாணவருக்கு சிகிச்சை அளித்த அவரது குடும்பத்தினர், மறுநாள் பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் மாணவரைத் தாக்கியது குறித்து கேட்டுள்ளனர்.

அப்போது, மாணவர் பிரக்தீஸ்வரன் தவறு செய்யவில்லை எனக் கூறி மன்னிப்பு கேட்டுக் கொண்ட தலைமை ஆசிரியர், இந்த விவகாரத்தைப் பெரிதுபடுத்த வேண்டாம் என்றும், உதவி தலைமை ஆசிரியரைப் பொறுப்பிலிருந்து நீக்கி, வேறொரு ஆசிரியரை உதவி தலைமை ஆசிரியராக நியமித்துள்ளதாகவும் தெரிவித்தாக மாணவரின் உறவினர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அதன் பின்னர், மாணவர் பிரகதீஸ்வரன் தொடர்ந்து பள்ளிக்குச் சென்று வந்துள்ளார். அப்போது, கடந்த டிசம்பர் 5ஆம் தேதி உதவி தலைமை ஆசிரியர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஆசிரியர் ராதாகிருஷ்ணன், வகுப்பறையில் பேசுவதாகக் கூறி மாணவர் பிரதீஸ்வரனைக் கடுமையாகத் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது குறித்து மாணவர் பிரதீஸ்வரன் கூறும்போது, “கடந்த 21ஆம் தேதி, நான் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது வேறு ஒரு மாணவர் செய்த தவறுக்காக என்னை அடித்துத் தாக்கினார். அது குறித்து தலைமை ஆசியரிடம் சென்று கூறியபோது, அவர் நான் சொன்னதைக் கேட்காமல், அவரும் என்னை அடித்தார்.

அதன் பின்னர், நேற்றைய முன்தினம் (டிச.6) நான் வகுப்பறையில் அமர்ந்திருந்தபோது, மீண்டும் என்னைக் கடுமையாக தாக்கினார். பிவிசி பைப்புகள், இரும்பு ராடுகள் போன்றவற்றினால் என்னைத் தாக்கினார். மேலும் அவர் என்னை காதோரம் பலமாக தாக்கியதில், ஒருபக்கம் செவித்திறன் முற்றிலுமாக கேட்கவில்லை. குறிப்பாக ஒரு புறம் வலி ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

அதன் பின்னர் மாணவரின் சிகிச்சைக்காக, மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல பரிந்துரை செய்துள்ளதாக மாணவரின் உறவினர் தரப்பில் கூறப்படுகிறது. மேலும், செவித்திறன் பாதிக்கும் அளவிற்கு கொடூரமாகத் தாக்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க:வடசென்னை முதல் தென் சென்னை வரை வடியாத வெள்ளம்… மீளாத தலைநகரம்…

Last Updated : Dec 8, 2023, 9:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details