பூவிருந்தவல்லியை அடுத்த குமணன்சாவடி, கன்டோன்மென்ட் பகுதியைச் சேர்ந்தவர் தமீம் அன்சாரி, இவரது மனைவி நஸ்ரின் கர்ப்பமாக இருந்துள்ளார். நஸ்ரினுக்கு நேற்று மதியம் பிரசவ வலி ஏற்பட்டதால், பூவிருந்தவல்லியில் உள்ள அரசு தாய்சேய் நல ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு பிரசவம் பார்ப்பதற்குரிய மருத்துவர்கள் பணியில் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்த செவிலி ஒருவர் நஸ்ரினுக்கு பிரசவம் பார்த்ததாகத் தெரிகிறது. நஸ்ரினுக்கு நேற்றிரவு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறக்கும்போதே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் நஸ்ரினின் உறவினர்களிடம் தெரிவித்தனர்.
பிரசவத்தின்போது உரிய மருத்துவர்கள் இல்லாமல், செவிலி பிரசவம் பார்த்ததால்தான் குழந்தை இறந்துவிட்டதாகவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உறவினர்கள் கோரிக்கை வைத்து மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.