தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கருகும் குறுவை நெற்பயிர்; சம்பா சாகுபடியும் கேள்விக்குறி' - பி. ஆர். பாண்டியன் வேதனை - செய்தியாளர் சந்திப்பு

திருவாரூர்: காவிரி டெல்டாவில் குறுவை நெற்பயிர்கள் கருகத் தொடங்கியுள்ளதாகவும், சம்பா சாகுபடியும் கேள்விக்குறியாகும் நிலையில் உள்ளதாகவும் பி.ஆர். பாண்டியன் கவலை தெரிவித்துள்ளார்.

PR Pandian press meet
PR Pandian press meet

By

Published : Jul 22, 2020, 7:05 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் மூன்று அடுக்கு முறையில் செயல்படும் கூட்டுறவு வங்கி செயல்பாடுகளை முடக்கி விவசாயிகளை ஒடுக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதனை எதிர்த்து விவசாயிகளும், கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறோம்.

கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்கப்படவில்லை. இந்நிலையில், கூட்டுறவுத் துறைப் பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் நடவடிக்கைக்கு தடை கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளனர். தடைவிதிக்க மறுத்துள்ள உயர் நீதிமன்றம் கூட்டுறவு வங்கிகளின் நிர்வாகத்தில் மத்திய அரசு தலையிடுவது சட்டவிரோதமானது என்றும், உரிய விளக்கம் கேட்டு மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மத்திய அரசின் சட்டவிரோத நடவடிக்கைக்கு 2013இல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொள்கை முடிவெடுத்து தடுத்து நிறுத்தினார். அதனைப் பின்பற்றி உடனடியாகத் தற்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் கொள்கை முடிவெடுத்து கூட்டுறவு வங்கிகளைப் பாதுகாக்க வேண்டும். உயர் நீதிமன்ற வழக்கில் அரசு தன்னையும் இணைத்துக் கொண்டு தன்னுடைய நிலையைத் தெளிவுப்படுத்தி சட்டப்பூர்வ அனுமதி பெற முன்வரவேண்டும்.

காவிரி டெல்டாவில் தமிழ்நாடு அரசின் அறிவிப்பை நம்பி சுமார் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிப் பணிகள் தொடங்கப்பட்டன. தற்போது சுமார் 1.50 லட்சம் ஏக்கரில் நாற்றுகளை நடவு செய்ய முடியவில்லை. நேரடி விதைப்பு செய்த விவசாயிகள் உரமிட முடியாமலும், தண்ணீரின்றி விவசாயப் பணிகளைத் தொடர முடியாமலும் பயிர்கள் கருகுவதைப் பார்த்து மனமுடைந்துள்ளனர்.

மேட்டூர் அணை தண்ணீர் 65 அடிக்கு கீழே சரிந்துவிட்டது. இனி சம்பா சாகுபடிப் பணிகளையும் மேற்கொள்ள முடியுமா, என்ற சந்தேகத்தில் பரிதவிக்கின்றனர். அரசனை நம்பி புருஷனைக் கைவிட்ட கதையாகக் குறுவையை நம்பி சம்பாவையும் கைவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கர்நாடக அணைகளில் 80 விழுக்காடுக்கு மேல் தண்ணீர் நிரம்பியுள்ள நிலையில், உரிய தண்ணீரை தமிழ்நாட்டுக்கு விடுவிக்க மறுக்கிறது. ஜனவரி மாதம் முதல் ஜூலை மாதம் வரை சுமார் 61 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும். ஆனால், 9 டிஎம்சி விடுவித்துள்ளதாக கர்நாடகம் சொல்லி தப்பிக்கப் பார்ப்பது சட்டவிரோதமானது.

எனவே உடனடியாக காவிரி மேலாண்மை ஆணைய அலுவலர்கள் குழு கர்நாடக, தமிழ்நாடு அணைகளை நேரில் பார்வையிட்டு உரிய தண்ணீரை தமிழ்நாட்டிற்குப்[ பெற்றுத்தந்து, கருகும் குறுவை பயிரைக் காப்பாற்றவும், சம்பா பணிகளைத் தொடங்குவதற்கு அவசரக் கால நடவடிக்கை மேற்க்கொள்ளவும் தமிழ்நாடு அரசு முடிவு எடுக்க வேண்டும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details