திருவாரூர்:தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் ஒன்றுபட்ட தஞ்சை மாவட்டத்தில் விவசாயத்தை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகளும் விவசாயக் கூலித் தொழிலாளர்களும் வாழ்ந்துவருகின்றனர். மேலும் விவசாயம் சார்ந்து ஜவுளி வியாபாரம், நகை வியாபாரம் முதலான பெரிய நிறுவனங்கள் தொடங்கி தேநீர்க் கடை, பெட்டிக் கடை வரை உள்ள சிறிய நிறுவனங்களும் பிழைப்பு நடத்திவருகின்றனர்.
பயிரைக் காப்பாற்றப் போராடும் விவசாயிகள்
இப்படிப்பட்ட விவசாயத் தொழிலுக்கு முக்கியமானது நீர் ஆதாரம். இத்தகைய நீர் அதிகமாக இருந்தாலும் ஆபத்து குறைவாக இருந்தாலும் ஆபத்து என்ற நிலையில் விவசாயிகள் பல்வேறு நிலைகளில் மழை, வெயில், குளிர் எனப் பல்வேறு தட்பவெட்ப நிலைகளில் பாடுபட்டு நெல்லை உற்பத்தி செய்வதோடு, நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்திவருகின்றனர்.
நாட்டின் பொருளாதார காரணிக்கு முக்கியப் பங்காற்றும் விவசாயத்தைக் காப்பாற்ற அரசு விவசாயிகளுக்கு உரம், விதை நெல், பூச்சிகொல்லி மருந்து உள்ளிட்டவைகளை மானியத்திலும், முழு மானியத்திலும் வழங்கிவருகிறது.
குறிப்பாக மழை அதிகம் பெய்தாலோ, அதிகமழையினால் ஏற்படும் வெள்ளத்தாலோ சாகுபடி வயல் வரப்பில் நீர் தேங்கினால் அதனை வடியவைத்துப் பயிரைக் காப்பாற்றிடப் போராடுகின்றனர். போதிய மழையின்றி பாசனத்திற்கு நீர் கிடைக்காத நிலையில் ஆறு, வாய்க்கால்களில் தேங்கிக் கிடக்கும் நீரைத் தேவைக்கு ஏற்ப ஆயில் இன்ஜினை கொண்டோ அல்லது இறைகூடை மூலமாகவோ இறைத்து பயிருக்கு உயிரோட்டத்தைத் தந்துவருகின்றனர்.