தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘சேமிப்பு கிடங்குகளை வாடகையின்றி தர வேண்டும்’- பிஆர்.பாண்டியன்! - பீ.ஆர்.பாண்டியன்

ஒன்றிய அரசு தனது சேமிப்பு கிடங்குகளை வாடகையின்றி நெல் கொள்முதலுக்காக வழங்க முன்வர வேண்டும் என விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்த பீ.ஆர்.பாண்டியன்
நெல் கொள்முதல் நிலையங்களை ஆய்வு செய்த பீ.ஆர்.பாண்டியன்

By

Published : Jun 25, 2021, 8:04 AM IST

திருவாரூர்:மன்னார்குடி அருகே ஆலங்கோட்டை, உள்ளிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை, தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பார்வையிட்டார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, “தமிழ்நாட்டில் நெல் உற்பத்தி தீவிரமடைந்துள்ளது. பெரும்பான்மையான மாவட்டங்களில் மாற்று பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் நெல் உற்பத்தியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால், நெல் உற்பத்தி அதிக அளவில் உள்ளதால் கொள்முதல் தடைப்பட்டுள்ளது.


மேலும், உற்பத்திக்கு ஏற்ப கொள்முதலுக்கான திட்டமிடலும், அடிப்படை கட்டமைப்புகளும் இல்லாததால் அறுவடை செய்த நெல் பல இடங்களில் கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான கொள்முதல் நிலையங்களில் கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட சம்பா நெல் திறந்தவெளி கிடங்குகளில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

கிடப்பில் போடப்பட்ட நெல் மூட்டைகள்:

கரோனா ஊரடங்கால் பல்வேறு மாவட்டங்களில் ரைஸ் மில் மூடப்பட்டுள்ளதால், அரிசி உற்பத்திக்கான இருப்பிலுள்ள நெல்லை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல முடியாமலும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

தற்போது தென்மேற்குப் பருவமழை தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கு பெய்து வருவதால், கிடப்பிலுள்ள நெல் மூட்டைகள் மழையில் நினைந்து வீணாகிறது. பாதுகாப்பான கிடங்கு வசதிகள் கிடையாது. நெல் மூட்டைகளை மூடி பாதுகாப்பதற்கான தார்பாய்கள் கிடையாது.

பிரதமரிடம் முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும்:

ஒன்றிய அரசுக்கு சொந்தமான கிடங்குகள், தேவையான அளவிற்கு இருந்தாலும் வாடகை கூடுதலாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபம் கழகத்தால் வாடகை செலுத்த இயலாத நிலையில் பயன்படுத்த முடியவில்லை.

எனவே பேரிடர் காலத்தில் மிகை உற்பத்தியை கணக்கில் கொண்டு தமிழ்நாட்டிற்குத் தேவையான சேமிப்பு கிடங்குகளை வாடகையின்றி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திடம் ஒப்படைக்க வேண்டும். இதுதொடர்பாக முதலமைச்சர் பிரதமருக்கு வலியுறுத்த வேண்டும். நெல் கொள்முதல் செய்வதற்கான தொகையை தேவைக்கேற்ப தமிழ்நாட்டிற்கு வழங்க பிரதமர் முழுமனதோடு முன்வரவேண்டும். இல்லையேல் விவசாயிகள் மிகுந்த துயரத்திற்கு ஆளாவார்கள்.

நெல் அழியும் நிலை ஏற்படும்:

கரும்பு உற்பத்தி ஆலை நிர்வாகிகளின் நிர்வாக சீர்கேட்டாலும், உரிய விலை கிடைக்காததாலும் பெரும் பகுதி விவசாயிகள் கரும்பு உற்பத்தி செய்வதை நிறுத்தி விட்டனர். நெல் உற்பத்திக்கு மட்டுமே கொள்முதல் விலை உத்திரவாதம் உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த ஈடுபாட்டோடு நெல் உற்பத்தியில் ஈடுபடுவதால் தமிழ்நாடு நெல் உற்பத்தியில் மிகை உற்பத்தி மாநிலமாக உள்ளது.

எனவே மண் வகைகளுக்கும், பருவ காலத்திற்கும் ஏற்ற பயிர் வகைகளை சாகுபடி செய்வதற்கான கொள்முதல், விலை உத்திரவாதம் கொடுத்து ஊக்குவிக்க முன்வர வேண்டும். இல்லையேல் வரும் காவிரி நீரை நம்பி குறுவை, சம்பா சாகுபடியில் உற்பத்தியாகும் நெல், விளைநிலங்களிலேயே அழியும் நிலை ஏற்படும்” என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும் நேரம் நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details