திருவாரூர்: நன்னிலம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 17 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணியில் ஈடுபட்டு வந்தனர். பல்வேறு இடங்களில் அறுவடை பணிகள் முடிந்து, அறுவடை செய்த நெல் மூட்டைகளை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மாவட்டம் முழுவதும் நான்கு நாட்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் தொடர் மழையால் நெற்பயிர்கள் வயலில் மூழ்கி சேதமடைந்துள்ளன. குறிப்பாக நன்னிலம், வலங்கைமான் குடவாசல், பேரளம் , கொல்லுமாங்குடி, வேலங்குடி, பாவட்டகுடி உள்ளிட்ட பகுதிகளில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளதாகவும், பயிர்களை அறுவடை செய்து அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்க்கு கொண்டு சென்றால், ஈரப்பதத்தை காரணம் காட்டி நெல்லைக் கொள்முதல் செய்ய மறுத்து வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.