திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட மேலப்பாளையூர் ஊராட்சியைச் சேர்ந்த நீலமேகம் என்பவர் தனது வயலில் சம்பா சாகுபடி செய்திருந்தார். உரத் தட்டுப்பாடு, ஆணைக்கொம்பன் ஈ தாக்குதல், தீடிர் மழை எனப் பல்வேறு இன்னல்களைத் தாண்டி அறுவடைக்கு தயாரான நெற்பயிர்களை அறுவடை செய்ய, அறுவடை இயந்திர தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று அவரது வயலின் அருகிலிருந்த பனை மரம் மின்சாரக் கம்பியில் உரசி தீப்பிடித்து, வயலில் விழுந்தாகக் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தீயானது மளமளவென வயல் முழுவதும் பரவியதில் அறுவடைக்குத் தயாராக இருந்த இரண்டு ஏக்கர் நெற்பயிர்கள் முழுவதும் தீக்கிரையாகின. நெற்பயிர்கள் தீப்பிடித்து எரிவதைக் கண்டு அருகில் உள்ளவர்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்ததில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.