திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் விவசாயத்தை நம்பி லட்சக்கணக்கான விவசாயிகளும், விவசாய கூலித் தொழிலாளர்களும் வாழ்ந்து வருகின்றனர்.
குறிப்பாக, காவிரி டெல்டா பாசன மாவட்டத்தின் கடைமடைப் பகுதி விவசாயத்தைச் சார்ந்துள்ளது.
இங்கு சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவிற்கு குறுவை பருவ நெல் சாகுபடியும், சுமார் 3.50 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா பருவ நெல் சாகுபடியும் நடைபெற்று வருகிறது.
நெல் கொள்முதல் நிலையங்கள்
இப்பகுதியில் விவசாயிகளின் நலன் கருதி மத்திய, மாநில அரசுகள் பல கோடி ரூபாய் நிதியினை ஒதுக்கி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல்லை கொள்முதல் செய்துவருகிறது.
இதற்காக ஆண்டுதோறும், மாவட்டத்தின் பல பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து உடனுக்குடன் நெல் கொள்முதல் செய்ய ஏதுவாக அரசு 450-க்கும் மேற்பட்ட இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறந்து உள்ளது.
அரசு விவசாயிகளுக்காகத் திறந்துவைத்துள்ள, இது போன்ற நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைக் கொள்முதல் நிலைய ஊழியர்கள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அலுவலர்கள் மற்றும் மாவட்டத்தின் வருவாய்த்துறை உயர் அலுவலர்களின் துணையோடு நெல் வியாபாரிகளுக்காகப் பயன்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகளை ஏமாற்றும் அலுவலர்கள்
அந்த வகையில் வெளிமாநில நெல் வியாபாரிகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ளும் கொள்முதல் நிலைய ஊழியர்கள், தங்களது வீடுகள் மற்றும் தங்களுக்கு ஆதரவான இடங்களில் ஆயிரக்கணக்கான மூட்டைகளைப் பதுக்கி வைத்துக்கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து, அதனை இரவோடு இரவாகத் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான சாக்குகளில் மாற்றி கொள்முதல் நிலையத்திற்குக் கொண்டு வந்து இருப்பு வைக்கின்றனர்.
மேலும், இத்தகைய வியாபாரிகளிடம் கொள்முதல் செய்ததை, நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ததாக போலியாகக் கணக்குக் காட்டி, நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட கொள்முதல் நிலைய ஊழியர்கள் லட்சக்கணக்கில் ஊழல் செய்து வருகின்றனர்.
நீடாமங்கலத்தில் விவசாயிகள் வேதனை
குறிப்பாக நீடாமங்கலத்தை அடுத்த அனுமந்தபுரம் என்ற கிராமத்தில் கொள்முதல் நிலைய ஊழியரும், அவரது மனைவியும் திமுக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவருமான பெண்ணும் கூட்டு முயற்சியில் அவர்களது வீட்டில், தினசரி வெளிமாநில வியாபாரிகளிடம் இருந்து ஆயிரக்கணக்கில் நெல் மூட்டைகளைப் பதுக்குவதாகத் தெரிகிறது.
அதன் பின்னர், அவை அருகிலுள்ள தேவங்குடி மற்றும் அரிச்சபுரம் உள்ளிட்டப் பல பகுதிகளில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்குக் கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதை அப்பகுதி விவசாயிகள் ஆதாரங்களுடன் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்கள் மற்றும் திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது வேதனையாக உள்ளதாகவும் அப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர்.