தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் ஊழல் புகார் - பிஆர் பாண்டியன் வேளாண் அதிகாரியிடம் முறையீடு! - delta farmers

PR Pandian: பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் மத்திய, மாநில அரசுகளிடம் உரிய பங்கீட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளும் காப்பீட்டு நிறுவனங்கள், ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதாக பி ஆர் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

Pr Pandian
பிஆர் பாண்டியன்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 4:09 PM IST

திருவாரூர்:காவிரி டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்டுள்ள பயிர்களை ஆய்வு செய்வதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் வேளாண் துறை உயர் அதிகாரிகள், டெல்டா மாவட்டங்களில் இரண்டு தினங்களாக பார்வையிட்டு வருகின்றனர். அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை தோட்டக்கலைத் துறை இயக்குநர் பிருந்தாதேவி நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று (ஜன.6) கோட்டூர் ஒன்றியம் இருள்நீக்கி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட இயக்குநர் பிருந்தாதேவியை நேரில் சந்தித்த தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பிஆர் பாண்டியன், பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

பின்னர் இது குறித்து பிஆர் பாண்டியன் பேசுகையில், “டெல்டா மாவட்டங்கள் முழுமையிலும் சுமார் 11 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் தண்ணீரின்றி கருகத் தொடங்கி இருக்கின்றன. வரவிருக்கும் பிப்ரவரி மாதம் இறுதி வரை தண்ணீர் தேவை இருக்கிறது.

இதனால் நாளொன்றுக்கு 3/4 டிஎம்சி வீதம் பிப்ரவரி இறுதிவரை தண்ணீரை மேட்டூரிலிருந்து விடுவிக்க வேண்டும். இல்லையேல், மிகப்பெரிய பேரிழப்பை டெல்டா விவசாயிகள் சந்திக்க நேரிடும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும்.

மேலும் வேளாண்துறை, வருவாய்த்துறை ஆகியவை ஒருங்கிணைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் நீர்ப்பாசனத்தை ஒழுங்குபடுத்த வேண்டும். வேளாண் துறையின் வேண்டுகோளை ஏற்று, கடந்த நவம்பர் மாதம் முதல் சாகுபடி தொடங்கிய நிலையில், குடிநீர் என்ற பெயரால் பாசன நீரை விடுவிக்க மறுத்து பயிர்கள் கருகுவதை தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் உள்ள தண்ணீரை தற்போது விவசாயிகள் பயன்படுத்தும் நிலை உள்ளது. இதனால் கோடை காலத்தில் கால்நடை மற்றும் பொதுமக்கள் தண்ணீர் இன்றி பாதிக்கும் நிலை உள்ளது. எனவே நீர் நிலைகளையும், மேட்டூர் அணை தண்ணீரைக் கொண்டு நிரப்புவதற்கு முன்வர வேண்டும். மேலும் பவானி சாகர் அணையில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்தி, பிப்ரவரி இறுதி வரையிலும் பாசன நீர் விடுவிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் காப்பீட்டு நிறுவனங்கள் ஊழல் முறைகேடு செய்கின்றன.

குறிப்பாக, இழப்பீடு குறித்த பயனாளிகள் பட்டியலை அரசுக்கு தெரிவிக்கிற காப்பீட்டு நிறுவனங்கள், மத்திய மாநில அரசுகளிடம் உரிய பங்கீட்டுத் தொகையை பெற்றுக் கொள்கின்றனர். அதனை உரிய காலத்தில் விவசாயிகள் வங்கிக் கணக்கில் விடுவிப்பதில்லை.

இது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிப்பதற்குகூட காப்பீட்டு நிறுவனங்கள் முன்வருவதில்லை. மேலும் ஒப்பந்தம் பெற்ற காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில், மாவட்டங்களில் பொறுப்புமிக்க அதிகாரிகளை நியமிக்கவில்லை.

இதனால் மாவட்ட ஆட்சியர், வேளாண் துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கான விளக்கங்களைகூட தெளிவுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காப்பீட்டு நிறுவனங்கள் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீட்டை உரிய காலத்தில் வழங்குவதை தமிழ்நாடு அரசு கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:தச்சங்குறிச்சியில் துவங்கியது முதல் ஜல்லிக்கட்டு போட்டி!

ABOUT THE AUTHOR

...view details