சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்துவரும் நிலையில் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சிகிச்சை அளித்துவருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாட்டில் அனைத்து மாவட்ட சுகாதாரத் துறையின் உத்தரவின்பேரில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் திறக்கப்பட்டுள்ளன.
தற்போது சீனாவிலிருந்து சொந்த ஊர் திரும்பிய மூன்று பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள, அவர்களுடைய ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரத்த மாதிரியின் முடிவுகள் 48 மணி நேரத்தில் தெரிவிக்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத் துறை அறிவித்திருந்தது. ஆனால் திருவாரூரில் நான்கு தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டவர்களின் முடிவுகள் இதுவரை வரவில்லை.
இதுகுறித்து மருத்துவமனை முதல்வரிடம் கேட்டபோது, "சென்னைக்கு அனுப்பியுள்ள ரத்த மாதிரிகளின் முடிவுகள் சுகாதாரத் துறை செயலருக்கு, பரிசோதனை மையம் அனுப்பிவிடும். அதன் பின்னர் சுகாதாரத் துறை செயலர் முடிவுகளை தெரிவிப்பார்" என்றார்.
திருவாரூரில் மூன்று பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனை சுற்றுவட்டாரத்தில் அசாதாரண சூழல் நிலவிவருகிறது. அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களும், மருத்துவமனைக்கு வந்து செல்லும் சக நோயாளிகளும் தொடர்ந்து அச்ச உணர்வில் உள்ளனர். எனவே பரிசோதனை முடிவுகளை அறிவித்து, உரிய சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : மர்மமான முறையில் 14 மயில்கள் உயிரிழப்பு!