தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்களில் அதிகளவில் நெல் உற்பத்தி செய்யும் மாவட்டம் திருவாரூர். மூன்றுபோகம் விளையும் அளவிற்கு செழிப்பு நிறைந்த மாவட்டம் தற்போது ஒரு போகம் விளைவிக்க கூட நீர் இல்லாமல் வறட்சியின் பிடியுல் உள்ளது. ஆண்டுதோறும் காவிரியிலிருந்து உரிய நேரத்தில் தண்ணீரை பெற விவசாயிகள் போராடி வருகின்றனர். ஜூன், ஜூலை மாதங்களில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடக மாநிலத்திற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அணைகளில் போதிய நீர் இல்லாததையும், மழை இல்லாததையும் காரணம் காட்டி கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுத்துவிட்டது. இந்நிலையில் மாண்டியா மாவட்ட விவசாயிகள் தண்ணீர் திறக்கக் கோரி கடந்த 10 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மாண்டியா மாவட்ட விவசாயிகளுக்கும், தமிழ்நாட்டிற்கும் காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட மேலாண்மை ஆணையத்தை வலியுறுத்துமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.