திருவாரூர்: திருத்துறைப்பூண்டி அருகே உள்ள இராயப்பநல்லூர், புழுதிக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் அவர் மன்னார்குடியில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “வடகிழக்கு பருவ மழையின் காரணமாக சென்னை, டெல்டா மாவட்டங்களில் பலத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமைச்சர்கள், களப் பணியாளர்கள், அலுவலர்கள் என அனைவரும் துரிதமாக செயல்பட்டு பாதிப்பை குறைத்திருக்கிறோம்.
விரைவில் உரிய இழப்பீடு
விவசாயிகளுடைய கருத்துக்கள், கோரிக்கைகள் கேட்டு பெறப்பட்டிருக்கின்றன. அமைச்சர்கள் அனைவரும் ஆரம்பகட்ட ஆய்வினை முடித்துள்ளனர். இதுவரை நடப்பு சம்பா பருவத்தில் 17 லட்சத்து 40 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதில் 68 ஆயிரம் எக்டேர் பரப்பளவிலான பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
முடிந்த அளவு பயிர்களைக் காப்பாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. முடியாத நிலங்களில் மறு உழவு செய்ய உதவி செய்யப்படும். விரைவில் கிராம வாரியாக முழுமையான கணக்கெடுப்பு நடத்தி முடித்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆட்சிக்கு வந்தவுடன் டெல்டா மாவட்ட பிரச்சனைகளை புரிந்து கொண்டு ரூ. 65 கோடி மதிப்பீட்டில், 4 ஆயிரம் கி.மீட்டருக்கு தூர்வாரியதன் பயனாக வெள்ள பாதிப்பு குறைந்துள்ளது. தற்போது பெரு மழையினால் தேங்கியிருக்கும் நீரும் இதன் மூலம் விரைவில் வெளியேறும்.
உழவர்களை காக்கும் அரசு திமுக