இது தொடர்பில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் பேசுகையில், ”உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலைத் தடுக்க, மக்களைப் பாதுகாக்க ஒரே வழி தங்களை தாங்களே தனிமைப்படுத்தி கொள்வது மட்டுமே ஒரே தற்காப்பு மருத்துவ முறை என்பதை ஏற்றுக் கொள்கிறோம். இதனடிப்படையில் தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்படுவதையும் வரவேற்கிறோம்.
அதே நேரத்தில் காய்கறிகள், பழங்கள் சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடை காலத்தில் விற்க முடியாமலும், உரிய விலை கிடைக்காமலும் பறிதவிப்பது வேதனையளிக்கிறது. தமிழ்நாடு அரசு தோட்டக் கலைத்துறை மூலம் விற்பனை செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதை பாராட்டுகிறோம். ஆனால், தனிமனித அன்றாட பயன்பாடு என்பது உற்பத்தியில் 20 விழுக்காடு மட்டுமே, மீதமுள்ள 80 விழுக்காடு உற்பத்தி திருமணங்கள், குடும்ப விழாக்கள், கோயில் திருவிழாக்கள் மூலம் மட்டுமே விற்பனை செய்ய முடியும்.
தற்போது, இந்நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டதாலும் மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ளதால் விற்க முடியாமல் விளைவிக்கப்பட்ட நிலத்திலேயே அழிந்து வருவதை தடுக்க இயலாது. எனவே பாதிக்கப்படுள்ள விவசாயிகளுக்கு பாதிப்பிற்கேற்ப இழப்பீடு வழங்கவும், விவசாயிகள் பெற்றுள்ள கடன் முழுவதையும் நிபந்தனையின்றி தள்ளுபடி செய்திட மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறேன்.