திருவாரூர்:இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வர் எட்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் அரங்க கூட்டம் நேற்று (ஜனவரி 2) மன்னார்குடியில் மருத்துவர் பாரதிச் செல்வன் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் காவிரி உரிமை மீட்புக் குழு அமைப்பின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பெ. மணியரசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது, "டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக வேளாண் சட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி விவசாயிகள் ஒன்றிணைந்து போராடி வெற்றிகண்டுள்ளனர். இந்த ஆண்டு வரவுள்ள பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஒன்றுமில்லாமல் ஓடிவிடும்.
அண்ணாமலை உண்ணாவிரதம் கபட நாடகம்
காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட முயற்சித்துவரும் கர்நாடகா அரசுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ்நாடு விவசாயிகள் போராடியதுதான் உண்மையான போராட்டம். தஞ்சையில் பாஜக அண்ணாமலை உண்ணாவிரதம் நடத்தியது கபட நாடகம்.
மேகதாது அணை கட்ட எதிர்ப்புத் தெரிவித்து ஜனவரி 6இல் காவிரி உரிமை மீட்புக்குழு போராட்டம் தமிழினத்தை மதித்துப் புரிந்துகொண்டவர் நம்மாழ்வர். வெகுஜன மக்களின் போராட்டத்தை முன்னெடுத்தவர். காவிரி டெல்டா மண்டலம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி அரசியல் பாகுபாடின்றி போராட்டத்தை முன்னெடுத்தார்கள். முதலமைச்சர் ஸ்டாலின் மீத்தேன் உள்ளிட்ட மக்களுக்கு எதிரான திட்டங்களைக் கொண்டுவர முயற்சிக்கிறார்.
தமிழ்நாட்டில் நெல் மட்டும் உற்பத்தி செய்யவில்லை, காவிரி நீர் இல்லையென்றால் டெல்டாவில் வேளாண்மை கிடையாது. கர்நாடக அரசின் முடிவுக்கு எதிராக, காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட எதிர்ப்புத் தெரிவித்து ஜனவரி 6ஆம் தேதி அன்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்பாட்டம் நடைபெறும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நரேந்திர மோடி திமிர் பிடித்தவர்- ஆளுநர் சத்ய பால் மாலிக்