ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மத்திய, மாநில அரசுகள் பாதுகாத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவாரூர் பழைய பேருந்து நிலையம் முன்பு, ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், "ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்களின் அனைத்து தொழிலாளர்களின் குடும்பத்திற்கும் மாதம் 7,500 ரூபாயாக ஆறு மாதத்திற்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். இன்ஸ்யூரன்ஸ் பெர்மிட் முடிந்த நாளிலிருந்து ஒரு ஆண்டு காலத்திற்கு, கால அவகாசம் நீட்டிப்பு செய்ய வேண்டும்.
அபராதம் மற்றும் வாகனப் பறிமுதல் செய்வதை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெறவேண்டும். பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வரவேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ஒரு லட்சம் ரூபாய் கடன் வழங்க வேண்டும். தனியார் வங்கி, தனியார் பைனான்ஸ் வாகன கடன் தவணையைக் கட்டிட, மேலும் ஆறு மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும்.
கரோனா காலத்தில் தற்கொலை செய்துகொண்ட ஆட்டோ தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஆட்டோ ஓட்டும் தொழிலாளர் சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.