திருவண்ணாமலை:வந்தவாசி அடுத்த நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை. மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் விஜய் (21). இவர் கடந்த 12ஆம் தேதி வீட்டைவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, இவரை கண்டுபிடித்துக் கொடுக்குமாறு தெள்ளாறு காவல் நிலையத்தில் விஜயின் தந்தை ஏழுமலை புகார் அளித்தார்.
இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 3 நபர்களிடம் விசாரணை செய்த காவல் துறையினர், தொலைபேசித் தொடர்புகளை வைத்து விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் வந்தவாசி அருகேவுள்ள சு.நாவல்பாக்கம் முருகன் கோயில் அருகே இன்று (ஜூன் 26) எரிக்கப்பட்ட நிலையில் சடலம் இருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
வந்தவாசி அருகே எரிந்த நிலையில் இளைஞர் சடலம் - போலீஸ் விசாரணை உடனடியாக சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் ஆய்வு செய்தனர். ஆய்வில் அது காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த இளைஞர் விஜய் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, அங்கிருந்த எலும்புகளை தடய அறிவியல் சோதனைக்காக சென்னை மயிலாப்பூர் அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி விஸ்வேஸ்வரய்யா, காவல் ஆய்வாளர்கள் சோனியா உள்ளிட்ட காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இதையும் படிங்க:தன்னுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த தோழியைக் கொன்ற நண்பன்... சாக்கு மூட்டையில் கிடந்த சடலத்தால் பரபரப்பு!