திருவண்ணாமலை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. இவ்விழாவை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார்.
இவ்விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. பங்குபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளையும் கேடயங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்புப் பள்ளியில் சிறப்பாகப் பணியாற்றிய பயிற்சி ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய மாவட்ட ஆட்சியர், மாவட்டத்தில் மாற்றுத்திறனாளர்களின் மனுக்கள் உடனுக்குடன் பரிலிக்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகக் கூறினார். மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ வசதிகள் வழங்குவதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாகக் கூறிய அவர், தமிழகத்திலேயே முதல்முறையாக மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேட்டரி கார் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.