திருவண்ணாமலை, வேங்கிக்கால் பகுதியிலுள்ள தொழிற்பேட்டையில் சங்கீதா ஹரி எனும் பெண் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாக்கு மட்டைகளைக்கொண்டு தட்டுகள் தயாரித்து வருகிறார்.
இந்தத் தொழிலுக்கு வருவதற்கு முன் சங்கீதா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாக்கு மட்டைகள் தயாரிப்பது குறித்து சங்கீதா கூறுகையில், "கர்நாடக மாநிலத்திலிருந்து பெரும்பாலும் பாக்கு மட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டு, பின்னர் அவை தரம் பிரிக்கப்படுகின்றன. தரம் பிரிக்கப்பட்டு தண்ணீர் உள்ள தொட்டியில் அரை மணி நேரம் தட்டுகள் ஊற வைக்கப்படுகின்றன. அரைமணி நேரம் ஊற வைக்கப்படுவதால், பாக்கு மட்டையிலிருக்கும் தேவையற்ற பூச்சிகளும் தூசிகளும் வெளியேறும். மேலும் அவை தட்டுகளாக வடிவமைப்பதற்குப் போதுமானவையாக மாறும். அரை மணி நேரம் தண்ணீரை வெளியேற்றுவதற்கு நேராகத் தட்டுகள் நிற்க வைக்கப்படும். பின்னர் இயந்திரங்களில் உருவாகும் சூட்டினைப் பயன்படுத்தி பல்வேறு அளவுகளில் பாக்கு மட்டைத் தட்டுகள் தயார் செய்யப்படுகிறது. பெரிய பாக்கு மட்டையிலிருந்து 12 இன்ச் தட்டுகளும், சிறிய பாக்கு மட்டையிலிருந்து 10, 8, 6 போன்ற சைஸ்களில் பாக்கு மட்டை தட்டுகளும் தயார் செய்யப்படுகின்றன" என்றார்.