தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

சாத்தனூர் அணையில் இருந்து விவசாயப் பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீரை முறையாகப் பயன்படுத்தி விவசாயப் பொருட்களை அதிகளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று அமைச்சர் எ.வ.வேலு வேண்டுகோள் விடுத்தார்.

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

By

Published : Mar 11, 2023, 4:43 PM IST

திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 50 ஆயிரம் ஏக்கர் மற்றும் திருக்கோயிலூர் ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 5 ஆயிரம் ஏக்கர் என மொத்தம் 55 ஆயிரம் ஏக்கர் விவசாயப் பாசன பகுதிகளுக்கு சாத்தனூர் அணை முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த அணையின் முழு நீர் மட்ட உயரம் 119 அடியாகும். இந்த அணையின் முழு கொள்ளளவு 7,321 மில்லியன் கன அடியாகும்.

சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்ட பின் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர் சந்திப்பு

தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக, தற்போது சாத்தனூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் சாத்தனூா் அணையின் நீர்மட்டம் தற்போது 118.55 அடியாக உயர்ந்துள்ளது. அதேநேரம் அணையின் மொத்த கொள்ளளவு இன்று (மார்ச் 11) காலை நிலவரப்படி, 7,220 மில்லியன் கன அடியாக உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சாத்தனூா் அணையில் இருந்து மார்ச் முதல் வாரத்தில் விவசாயப் பாசனத்திற்காக இடது மற்றும் வலது புற கால்வாய்களின் வழியே தண்ணீர் திறந்து விடப்படும். அதன்படி விவசாயப் பாசனத்திற்காக சாத்தனூா் அணையில் இருந்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இன்று இடது மற்றும் வலது புற கால்வாய்களில் இருந்து 570 கன அடி வீதம் தண்ணீரை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து விவசாயப் பாசனத்திற்காக தொடந்து 90 நாட்கள் இடது புற கால்வாயில் 350 கன அடி தண்ணீரும், வலது புற கால்வாயில் 220 கன அடி தண்ணீரும் திறந்து விடப்படும். இதன் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும். அதேபோல் இன்று திருவண்ணாமலை மாவட்டத்தின் சாத்தனூர் அணையின் பிக்கப் அணைக்கட்டில் உள்ள இடது மற்றும் வலது புற கால்வாயில் இருந்தும் தண்ணீரை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, “விவசாயப் பாசனத்திற்கு சாத்தனூர் அணை தற்போது திறக்கப்பட்டுள்ளது. அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரை, முறையாகப் பயன்படுத்தி விவசாயப் பொருட்களை விவசாயிகள் அதிகளவு உற்பத்தி செய்ய வேண்டும் என விவசாயிகளுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

திமுக தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் பொறுப்பேற்ற உடன் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற வகையில், நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து தற்போது வரை விவசாயத்திற்காக தனி பட்ஜெட் போடப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.

மேலும் விவசாயிகளுக்குத் தேவையான அனைத்தையும் செய்வதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் தயாராக உளளார். விவசாயத்திற்கு ஆதாரமாக இருப்பது தண்ணீர். அந்த தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி விவசாயப் பொருட்களை அதிகளவு உற்பத்தி செய்ய வேண்டும்” என தெரிவித்தார். இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உள்பட அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டார்.

இதையும் படிங்க:திருச்செந்தூர் கடற்கரையில் கரை ஒதுங்கிய மர்ம பொருள்.. பொதுமக்கள் பீதி!

ABOUT THE AUTHOR

...view details