சென்னை:திருவண்ணாமலையை தலைமையிடமாகக் கொண்டு ஸ்டார் சேவா பவுண்டேஷன் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. நிறுவனரான ஜெயராமன், மேலாளர் இளவரசி, தமிழ்ச்செல்வன் ஆகியோர் இந்நிறுவனத்தை நடத்தி வந்துள்ளனர். இந்த நிறுவனம் தமிழகம் முழுவதும் உள்ள தொண்டு நிறுவனங்கள், மகளிர் குழுக்களை அணுகி ஐம்பது ரூபாய்க்கு தங்க மூக்குத்தி, புடவை, ஆயிரத்து 500 செலுத்தினால் வேளாண் அபிவிருத்தி திட்டத்தில் 4 ஆடுகள், 10 ஆயிரம் முன்பணம் செலுத்தினால் ஒரு லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் ஆகியவை வழங்கப்படும் என சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பணம் கொடுத்த மூன்று மாதத்தில் திட்டத்திற்கான பொருள்கள் கிடைத்துவிடும் என பொதுமக்களிடம் வாக்குறுதி அளித்துள்ளனர். குறிப்பாக இந்த நிறுவனம் என்ஜிஓக்களை குறிவைத்து, இந்த திட்டங்களில் பொதுமக்களை முதலீடு செய்ய வைத்தால் ஒரு நபருக்கு நூறு ரூபாய் வீதம் என்ஜிஓக்களின் உரிமையாளருக்கு வழங்கப்படும் எனவும் இதற்கான தனியாக மாத சம்பளம் 35 ஆயிரம் ரூபாய் அவர்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
இதை நம்பி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு என்ஜிஓ-க்கள் அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்களையும், மகளிர் குழுக்களையும் அணுகி இந்த திட்டங்கள் குறித்து கூறியுள்ளனர். 50 ரூபாய்க்கு மூக்குத்தியா என ஆச்சரியத்தில் பலரும் பணம் செலுத்தியதாக கூறப்படுகிறது. அதே போல் ஆயிரத்து 500 ரூபாய் செலுத்தினால் நான்கு ஆடுகள் கிடைக்கும் என்ற திட்டத்திலும், ஒரு லட்சம் ரூபாய் வட்டி இல்லா கடனுக்காக பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த என்.ஜி.ஓ-க்கள் மூலம் செலுத்தியுள்ளனர்.
ஸ்டார் சேவா பவுண்டேஷன் என்ற இந்த நிறுவனம் மூன்று மாதத்திற்குள் இந்த திட்டத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களை முதலீடு செய்ய வைத்தால் மட்டுமே என்ஜிஓ-க்களுக்கு கமிஷன் கிடைக்கும் என கூறியதால் டார்கெட் வைத்து ஒவ்வொரு என்.ஜி.ஓ-க்களும் அதிகபட்சம் பத்தாயிரம் பேர் வரை இந்த திட்டங்களில் பொதுமக்களை முதலீடு செய்ய வைத்துள்ளனர்.