திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுப்பதற்கான பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இப்பணிகளில் அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரப் பணியாளர்கள், காவல் துறையினர், தூய்மைப் பணியாளர்கள் உள்பட அனைவரும் இரவு, பகல் பாராமல் 24 மனி நேரமும் பணியாற்றிவருகிறார்கள்.
இதன்படி குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144இன் கீழ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருள்கள், காய்கறிகள், பழங்கள், மருந்துகள் உள்பட அனைத்தும் நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் அனைத்துக் கடைகளும் மூடப்பட்டு மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்றுமுதல் அனைத்து காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்துவரும் தற்காலிக சந்தைகள் மூடப்பட்டன. இதற்கு மாற்றாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் காய்கறிகள், பழங்கள் ஆகியவை வாகனங்கள், தள்ளு வண்டிகள் மூலம் விற்பனைசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அரிசி, பருப்பு, எண்ணெய் என அனைத்து அத்தியாவசிய பொருள்கள் விற்பனைசெய்யும் கடைகள், பல்பொருள் சிறப்பு அங்காடிகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதற்கு மாற்றாக அத்தியாவசிய பொருள்களை விற்பனைசெய்யும் கடைகள் தங்களது வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விநியோகம்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று விநியோகம் மேலும் மருந்தகங்கள், பெட்ரோல் சேமிப்பு நிலையங்கள், வங்கி ஏடிஎம்கள், எரிவாயு முகவர்கள், இறைச்சிக் கடைகள் ஏற்கனவே உள்ள நடைமுறைகளின் அடிப்படையில் தொடர்ந்து செயல்பட்டுவருகின்றன.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட கட்டுப்பாடுகளை பொதுமக்கள், வியாபாரிகள், வணிகர்கள் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி உத்தரவிட்டதன்படி, அனைத்து மளிகைக் கடை, காய்கறிச் சந்தை, பல்பொருள் சிறப்பு அங்காடி என அனைத்தும் மூடப்பட்டன.
மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி நேற்று முதல் மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காய்கறி சந்தை, மளிகைக் கடை, பல்பொருள் சிறப்பு அங்காடிகள் மூடப்பட்டதால் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.