தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விவசாயிகளிடம் முன்பதிவு செய்து விதை நெல் கொள்முதல் செய்வதில் குளறுபடி!

திருவண்ணாமலை: முன்பதிவு செய்து விதை நெல் கொள்முதல் செய்யாமல் வேளாண் துறை அலுவலர்கள் செயல்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

விதை நெல் கொள்முதல் செய்வதில் குளறுபடி
விதை நெல் கொள்முதல் செய்வதில் குளறுபடி

By

Published : Mar 13, 2020, 2:28 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சுற்றுவட்டாரப் பகுதி முழுவதும் விவசாயத்தையே நம்பியுள்ள பகுதியாகும். இங்கு அதிகப்படியாக நெல் சாகுபடி செய்துவருகின்றனர். செங்கம் வேளாண் துறையினர் முன்பதிவு செய்த விவசாயிகளிடம் மட்டுமே விதை நெல் வாங்குவர்.

பின்னர், விதை நெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து, கோவையில் உள்ள விதை ஆராய்ச்சி கூடத்திற்கு அனுப்பி விதையின் தரத்தை உறுதி செய்வர். தரமான விதை நெல் தமிழ்நாடெங்கும் உள்ள விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

இதுபோல, முன்பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடம் மட்டுமே, விதைக்காக கொள்முதல் செய்யும் நெல்லின் விலை இரட்டிப்பாக கிடைக்கும். இதனால், முன்பதிவு செய்த விவசாயிகளுக்கு லாபம் கிடைத்தது.

இந்நிலையில், செங்கம் வேளாண் துறை அலுவலர்கள் இதுவரை எந்தவொரு விவசாயிகளிடமிருந்தும் முன்பதிவு செய்யாமல் விதை நெல்லை நேரடியாக கமிஷன் மண்டிகளின் உரிமையாளர்களிடம் வாங்கியுள்ளனர்.

விதை நெல் கொள்முதல் செய்வதில் குளறுபடி

மொத்தமாக குறைந்த விலைக்கு கொள்முதல் செய்ததால், விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய இரட்டிப்பு லாபம் இம்முறை கிடைக்கவில்லை. அதனை வேளாண் அலுவலர்களே முழுமையாகப் பெற்றுவருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

செங்கம் அடுத்த புதுப்பாளையம் பகுதியில் நெல் அறுவடை 90 விழுக்காடு நிறைவடைந்த நிலையில், நேரடி கொள்முதல் நிலையம் அமைத்து அதிகளவு நெல் கொள்முதல் செய்துவருவது எப்படி என விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

நேரடி கொள்முதல் நிலையத்தின் செயல்பாடுகள் பெயரளவிற்காக நடத்தப்படுகிறது. மறைமுகமாக, ஆயிரக்கணக்கான நெல்மூட்டைகளை கமிஷன் மண்டி உரிமையாளர்களிடமிருந்து கொள்முதல் நிலையத்திற்கு வரவழைக்கின்றனர்.

சுயலாபத்திற்காக முன்பதிவு இல்லாமல் நெல் கொள்முதல் செய்து, விதை ஆராய்ச்சி கூடத்திற்கு அனுப்பும் பணி நடைபெற்றுவருவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். வேளாண் அலுவலர்களிடம் விவசாயிகள் இது பற்றி கேள்வி எழுப்பும்போது உரிய பதில் அளிக்காமல் அலட்சியம் காட்டிவருவதாகத் தெரிகிறது.

இதையடுத்து, வேளாண் அலுவலர்கள் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.

இதையும் படிங்க:பீர் ஏற்றுமதி மூலம் ரூ.120 கோடி வருவாய்

ABOUT THE AUTHOR

...view details