திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலுகா காட்டுமலையனூர் கிராமத்தில் வசித்துவருபவர் 90 வயது மூதாட்டி அம்புஜம் அம்மாள். இந்நிலையில், தனது நிலத்தை போலி ஆவணம் தயாரித்து சிலர் அபகரித்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
போலி ஆவணம் தயாரித்து 2.35 ஏக்கர் நிலம் அபகரிப்பு!
திருவண்ணாமலை: போலி ஆவணம் தயாரித்து தனது 2.35 ஏக்கர் நிலத்தை அபகரித்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டுமென 90 வயது மூதாட்டி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் அளித்த மனுவில், "இறந்துபோன எனது கணவர் பெயரில் உள்ள 2.35 ஏக்கர் நிலத்தை திருவண்ணாமலை வருவாய்த் துறை அலுவலர்கள், என் ஊரைச் சேர்ந்த மனவளர்ச்சி குன்றிய பிச்சாண்டி பெயரைக் கொண்டு கூட்டுப் பட்டாவாக மாற்றி, பின்பு தனிப்பட்டாவாக மாற்றம் செய்து மோசடி செய்துள்ளனர்.
இந்த மோசடியில் ஈடுபட்ட சோமாசிபாடி கிராமத்தைச் சேர்ந்த குணசேகரன், வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுத்து பெயர் மாற்றிய பட்டாவை தீவிர விசாரணை செய்து என் கணவர் பெயரில் மாற்றித் தர வேண்டும்" என கோரிக்கைவிடுத்திருந்தார்.