திருவண்ணாமலை:சுமார் 300 ஆண்டு பழமை வாய்ந்த திருவண்ணாமலை நகர் கிரிவலப் பாதையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு பச்சையம்மன் மன்னர்சாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்த வகையில் யாக சாலைகள் அமைக்கப்பட்டு 20 யாக குண்டங்களில் 4 நாட்களாக சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது.
2004ஆம் ஆண்டு நடைபெற்ற பச்சையம்மன் ஆலய கும்பாபிஷேகம் 19 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (ஜனவரி 27) நடைபெற்றது. இன்று அதிகாலை கோ பூஜையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழா, நான்கு கால பூஜைகள் முடிந்து யாகசாலையில் பூரணாகதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து யாக சாலையில் உள்ள புனித நீர் சிவாச்சாரியார்களால் கொண்டுவரப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க அருள்மிகு பச்சையம்மன் மன்னார்சாமி திருக்கோயிலில் உள்ள கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.