திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று (நவ. 27) அதிகாலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று தொடங்கி வருகின்ற டிசம்பர் 6 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநில மற்றும் வெளி நாடுகளிலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்தினை முன்னிட்டு இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் கொடிமரம் அருகே எழுந்தருளினர். அதிகாலை 5.30 மணியளவில் தொடங்கி சிவாச்சாரியார்கள் வேத மந்திரம், முழங்க பக்தர்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட கோயிலில் உள்ள 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.