திருவண்ணாமலை:செய்யாறு தாலுகா, மேல்மா சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வலியுறுத்தி மேல்மா கூட்ரோட்டில் கடந்த சில மாதங்களாக கீற்றுக் கொட்டகை அமைத்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இவர்கள், பல்வேறு கட்ட போராட்டங்கள் மூலமாக விவசாயிகள் நிலம் கையகப்படுத்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர்.
அந்த வகையில், செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 2,700 ஏக்கர் விளைநிலங்கள் சட்டத்திற்கு எதிரான முறையில் பறிக்கப்படுவதை எதிர்த்து, 128 நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் 147 பேர் மீது, செய்யாறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதைத்தொடர்ந்து, மேல்மா சிப்காட் எதிர்ப்பு இயக்க நிர்வாகி அருள் (வயது 45) உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஏற்கனவே அதிக வழக்குகளில் தொடர்புடைய, அருள் மற்றும் 6 நபர்கள், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரால் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வந்தன. இதைத் தொடர்ந்து, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் அவர்களை விடுவிக்கக்கோரி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். அதில், வருங்காலங்களில் இது போன்று அரசு திட்டங்களை காரணமில்லாமல் எதிர்க்க மாட்டோம் என்றும், பிறர் தூண்டுதலின் பேரில் இத்தகைய செயல்களில் ஈடுபட மாட்டோம் என்றும் கூறி கோரிக்கை விடுத்தனர்.