Tiruvannamalai ATM Robbery: திருவண்ணாமலை:தமிழ்நாட்டையே உலுக்கிய திருவண்ணாமலையில் ஒரே நாள் இரவில் ஒரே பாணியில் நடந்த ஏடிஎம் கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் சைபர் கிரைம் பிரிவினருடன் இணைந்து 'டவர் டம்ப் அனாலிசிஸ்' என்ற அதிரடியான திட்டத்தை கையில் எடுத்துள்ளனர். இதன் மூலம் கொள்ளையர்கள் பயன்படுத்திய போன்களில் யாரெல்லாம் தொடர்புகொண்டு பேசினார்கள் என்றும்; எங்கெல்லாம் பேசினார்கள் என்றும் எளிதில் கண்டுபிடிக்கலாம் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கோலார் தங்க வயலில் (KGF) கிடைத்த சிக்னலின் அடிப்படையில், அப்பகுதியில் தங்கியிருந்த 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருவண்ணாமலையில் அடுத்தடுத்து ஏடிஎம் மையங்களை கொள்ளையடித்து தீ வைத்து தப்பிச் சென்ற கொள்ளையர்களைப் பிடிக்க ஆந்திரா, கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு முன் இதேபோல இந்தியா முழுவதும் பலமுறை நடந்த கொள்ளை சம்பங்களில் தொடர்புடைய கொள்ளையர்கள், இந்த திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்திலும் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் டிஎஸ்பி குணசேகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அங்கிருக்கும் செல்போன் டவரில் எத்தனை செல்போன் அழைப்புகள் வந்துள்ளன; எத்தனை செல்போன் அழைப்புகள் சென்றுள்ளன என்பன குறித்து தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்து கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் குறித்த தீவிர விசாரணையில் சென்னை சைபர் கிரைம் போலீசாரின் உதவியை தேடுதல் வேட்டையில் ஈடுபடும் தனிப்படை போலீசார் நாடியுள்ளனர். சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கட்டுப்பாட்டில் செயல்படும் புதிய சைபர் கிரைம் ஆய்வகம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் 30-க்கும் மேற்பட்ட புதிய உபகரணங்கள் மென்பொருட்கள் பயன்படுத்தப்பட்டு குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிப்பதற்காக நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த அடிப்படையில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளையில் கிடைக்கப்பெற்ற சிசிடிவி காட்சிகள், செல்போன் அழைப்பு ஆகியவற்றை அடிப்படையாக வைத்து கொள்ளையர்களைப் பற்றிய பல்வேறு புதிய தகவல்களை துல்லியமாக எடுத்து கொள்ளையர்களைப் பிடிக்க சென்னை சைபர் கிரைம் பிரிவு உதவி வருகிறது. 15-க்கும் மேற்பட்ட காவலர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
அதன் அடிப்படையில் திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை விவகாரத்தில் கிடைக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் தன்மை என்பது குறைவாக இருந்தாலும், அந்த சிசிடிவி காட்சிகளை துல்லியமாக தெளிவாக மாற்றி பல்வேறு கொள்ளையர்களின் தெளிவான புகைப்படங்கள் உள்ளிட்டவை அதில் துல்லியமாக மாற்றும் வகையிலான மென்பொருள்கள் பயன்படுத்தப்பட்டு தகவல்களை திரட்டி உள்ளதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், திருவண்ணாமலை கொள்ளைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் வைத்து வாகனத்தின் நம்பர் பிளேட் மட்டுமல்லாது எவ்வளவு வேகத்தில் செல்கிறது உள்ளிட்ட விவரங்களையும் கணித்து, அதன் மூலம் கொள்ளையர்கள் எவ்வளவு கிலோமீட்டர் சென்றிருக்கலாம் என்ற விவரங்களையும் போலீசார் திரட்டி வருகின்றனர்.