திருவண்ணாமலை: பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, கடந்த நவம்பர் 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி, 26ஆம் தேதி அதிகாலை கோயிலின் கருவறை முன்பு பரணி தீபமும், அன்று மாலை 6 மணி அளவில் கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.
அதாவது, மலை மீது ஐந்தே முக்கால் அடி உயரமும், 300 கிலோ எடையும் கொண்ட மகா தீபக் கொப்பரையில், சுமார் 4,500 கிலோ நெய் மற்றும் 1,100 மீட்டர் காடா துணி திரியாக பயன்படுத்தி மகா தீபம் ஏற்றப்பட்டது. அன்று முதல் தொடர்ந்து 10 நாட்களாக மலை உச்சியில் ஜோதி வடிவமாக காட்சியளித்த அண்ணாமலையார், 11வது நாளான நேற்று ஜோதிப் பிழம்பாக பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்த மகா தீபத்தைக் காண வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளி நாட்டில் இருந்தும் சுமார் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை புரிந்து, 14 கிலோ மீட்டர் கிரிவலம் மேற்கொண்டனர். கடந்த நவம்பர் 26ஆம் தேதி ஏற்றப்பட்டு, தொடர்ந்து 11 நாட்கள் தீப தரிசனம் செய்யப்பட்டு, நேற்றுடன் நிறைவு பெற்றது.