திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான மணிகண்டன், அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மகள் ஷோபானவை கடந்த 8 வருடத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். நான்காவது முறையாக கர்ப்பமாக இருந்த ஷோபனாவை, அவர் தொடர்ந்து வரதட்சணை கேட்டும், பெண் குழந்தைகளாக பெற்றுக்கொடுக்கிறாய் என்று கூறியும் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜூலை 8) இரவு மணிகண்டன் ஷோபனாவை அடித்ததில் அவர் மயங்கிவிழுந்தார். இதன்பின்பு, அருகிலிருந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஷோபனாவை தனது ஆட்டோவில் வைத்து மணிகண்டன் கொண்டு சென்றார். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.
இதில், அதிர்ச்சியடைந்த மணிகண்டன் மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்து ஷோபனாவின் உறவினர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மேல் பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு ஷோபனா இறப்பிற்கு காரணமான கணவர் மணிகண்டன், அவரது தாய், தந்தையை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தினர்.
இதற்கிடையில், மணிகண்டனை செங்கம் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். வரதட்சணைக்காக 8 மாத கர்ப்பிணியை அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேல்பள்ளிப்பட்டு கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து செங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:பெண்களிடம் தொடர் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்ட போலீஸ்... கட்டாய ஓய்வு கொடுத்த காவல் துறை!