திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்து பொதுக்கூட்டம் பாஜக சார்பில் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட பாஜக தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சேகர், மாவட்ட துணைத் தலைவர் காடகமான் முருகன், மாவட்ட செயலாளர் சந்திரசேகர், மகளிரணி தலைவர் பானு நிவேதிதா மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, அணி, பிரிவு நிர்வாகிகள், பாஜக தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் சிறப்புரை ஆற்றினார்.
கூட்டத்தில் கருப்பு முருகானந்தம் பேசுகையில், "பாஜகவின் இத்தனை ஆண்டு கால ஆட்சியில் எந்த போராட்டத்தையும் கண்டு அஞ்சியதில்லை, எந்த திட்டத்திலும் பின்வாங்கியது இல்லை. முத்தலாக் தடை சட்டம் கொண்டு வந்த பிறகு இஸ்லாமிய பெண்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாடி, அதிக எண்ணிக்கையில் பாஜகவுக்கு ஓட்டளிக்க தொடங்கியுள்ளனர். விசா இல்லாமல் வேறு எந்த நாட்டிற்கும் எதிர்கட்சியினர் சென்றுவிட முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.