திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் திருகார்த்திகை தீபத்திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.
திருக்கார்த்திகை தீபவிழாவின் 10 ஆம் நாளான இன்று காலை அண்ணாமலையார் சன்னதியில் ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தினை விளக்கும் விதமாக கோயிலில் உள்ள சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பின்னர் மாலை 5 மணியளவில் அண்ணாமலையார், உண்ணாமலையம்மன் பல்வேறு சிறப்பு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஆலய கொடிமரத்தின் முன்பே தீப தரிசன மண்டபத்தில் தோன்றி பக்தர்களுக்கு காட்சி அளித்து தீப மண்டபத்தில் எழுந்தருளினர்.
இதையடுத்து, பஞ்ச மூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளினர்கள். பின்னர் சரியாக மாலை 6 மணியளவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே காட்சியளிக்கும் சிவனின் பாதி சக்தி என்பதை உணர்த்தும் வகையில் அர்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.
அப்போது, கோயிலின் கொடி மரத்தின் அருகிலுள்ள அகண்டத்தில் தீபம் ஏற்றப்படும். இதைத்தொடர்ந்து, சரியாக மாலை 6 மணியளவில் கோயிலின் பின்புறம் உள்ள 2 ஆயிரத்து 668 அடி உயரம் கொண்ட மலைமீது அனேகன் ஏகனாக ஜோதி வடிவமாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக மஹா தீபம் ஏற்றப்பட்டது.