தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனையாவதைக் கண்டித்து விவசாயிகள் ஆர்பாட்டம் திருவண்ணாமலை:தடை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளை விற்பனை செய்யும் கடைகளின் உரிமையை ரத்து செய்ய கோரியும், சமூக பாதுகாப்பு நலத்திட்ட உதவிகள் விவசாயிகளுக்கு கிடைக்கவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக விவசாயிகள் தரையில் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி சார்பற்ற விவசாய சங்கத்தின் மாவட்ட செய்தி தொடர்பாளர் புருஷோத்தமன் தலைமையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக விவசாயிகள் ஒன்று திரண்டனர்.
ஒன்று திரண்ட விவசாயிகள் அனைவரும் சில கோரிக்கைகளை வலியுறுத்தி குறிப்பாக, விவசாயிகளுக்கு மாட்டு கொட்டகை அமைக்க உத்தரவு தரவில்லை என கூறியும், அரசு நலத்திட்ட உதவிகளில் விவசாயிகளுக்கு உரிய முன்னுரிமை அளிப்பதில்லை எனவும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் உருண்டு அங்கப்பிரதட்சணம் செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளான ரேட் கில்லர், கோளரி பைரிபாஸ், சைபர் மெத்ரின் உள்ளிட்ட பல பூச்சிக்கொல்லி மருந்துகள் மனித உயிருக்கு மிகவும் ஆபத்து என கருதி தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டு உள்ளதாகவும், ஆனால் தடை செய்யப்பட்ட இந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் தொடர்ந்து விற்பனையில் உள்ளதாகவும், இதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை எனவும், விற்பனை செய்யும் கடைகளின் மீது எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
இதையும் படிங்க: கலைஞர் நூற்றாண்டு விழா: பல கோடி ரூபாய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சர் உதயநிதி!
அது மட்டுமல்லாமல், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசினால் செயல்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்பு நலத்திட்ட உதவிகள் எதுவும் தங்களுக்கு கிடைப்பது இல்லை எனவும், குறிப்பாக இன்று (ஜூலை 18) நடைபெறும் கோடை விழாவில் வேளாண் துறையின் சார்பில் பயனாளிகளின் பட்டியலை வெளியிட வேண்டும் எனவும், கால்நடை கொட்டகை அமைக்க கோரி ஏற்கனவே பலர் மனு அளித்திருந்த நிலையில், இதுவரை தங்களுக்கு கால்நடை கொட்டகை அமைத்து தரவில்லை என்பது போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜூலை 17) விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டனர்.
பின், தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளை விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நூதன முறையில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக தரையில் புரண்டு அங்கப்பிரதட்சணம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பாக அங்கப்பிரதட்சணம் செய்து போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க:அரசு நிலத்தை அரசிடமே விற்று மோசடி.. ரூ.30லட்சம் மோசடியில் 3 பேரை தேடும் போலீஸ்!