திருவண்ணாமலையில் உள்ள பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக விளங்குகின்ற நினைத்தாலே முக்தி தரும் அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு பூர்வாங்கப் பணிகளுக்காக ராஜகோபுரம் முன்பு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பந்தக்கால் நடும் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையாக பக்தர்களின்றி இவ்விழா நடத்தப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான திருவண்ணாமலையில் உள்ள அருள்மிகு அருணாசலேசுவரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் பத்து நாள்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இந்த ஆண்டு வரும் நவம்பர் 20 அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கி 29ஆம் தேதியன்று அதிகாலை 4 மணியளவில் பரணி தீபமும், மாலையில் ஆறு மணிக்கு இரண்டாயிரத்து 668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
பத்து நாள்கள் நடைபெறும் தீபத்திருவிழாவின் பூர்வாங்கப் பணிகளுக்காக இன்று திருக்கோயிலில் பந்தல்காலுக்கு சிறப்பு திருமுழுக்கு ஆராதனை நடைபெற்றது.