திருவண்ணாமலை நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து கடைக்காரர்கள் ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை மத்தியப் பேருந்து நிலையத்திலுள்ள கடைகளில் நகராட்சி ஊழியர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் இருக்கின்றனவா என அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது முறுக்கு, மிக்சர் உள்ளிட்ட தின்பண்டங்களை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதனைப் பார்த்த நகராட்சி ஊழியர்கள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதாகக் கூறி கடைகளுக்கு 5ஆயிரம் ரூபாய் அபராதமாக விதித்தனர். மேலும், அங்கிருந்த பொருள்களை குப்பைக் கூடையில் போட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்தால் கடைகளுக்குச் சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த கடைக்காரர்கள், மத்தியப் பேருந்து நிலையத்தில் இருக்கும் அனைத்து கடைகளையும் அடைத்து திடீரென மத்தியப் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அவர்களை சமாதானப்படுத்தி சாலை மறியலை கைவிட செய்தனர்.
மேலும், நகராட்சி ஊழியர்களிடமும் கடை உரிமையாளர்களிடமும் நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பெரும் பரபரப்பு நிலவியது.
இதையும் படிங்க:டிச.24ல் திமுக அனைத்து அணிகள் நிர்வாகிகள் கூட்டம்!