தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவிக்குப் பாலியல் தொல்லை: முன்னாள் ஆசிரியர் மீது பாய்ந்தது போக்சோ! - திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஆரணி அருகே தனியார் பள்ளி மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக முன்னாள் ஆசிரியர் மீது மாணவியின் தாயார் புகார் அளித்ததையடுத்து போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரைத் தேடிவருகின்றனர்.

தனியார் பள்ளி முன்னாள் ஆசிரியர் மீது மாணவியின் தாய் பாலியல் புகார்
தனியார் பள்ளி முன்னாள் ஆசிரியர் மீது மாணவியின் தாய் பாலியல் புகார்

By

Published : Jun 22, 2021, 4:51 PM IST

Updated : Jun 22, 2021, 7:40 PM IST

திருவண்ணாமலை: ஆரணி அருகே லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (32). இவர் ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் அரசு தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தார். அப்போது ஆரணியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2016ஆம் ஆண்டு சேர்ந்து பணியாற்றிவந்தார். இவர் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்திவந்துள்ளார்.

அப்போது, அதே பள்ளியில் ஆரணி டவுன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் 8ஆம் வகுப்புப் படித்துவந்துள்ளார். இந்நிலையில் ஆசிரியர் ராஜாவுக்கும், 8ஆம் வகுப்பு மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் ஆசிரியர் ராஜா குரூப்-4 தேர்வில் தேர்ச்சிபெற்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசுப் பணியில் சேர்ந்தார். நான்கு ஆண்டுகாலமாக திருவாரூர் மாவட்டத்தில் அரசு ஊழியராகப் பணியாற்றிவருகின்றார்.

இருப்பினும் ஆரணியில் பள்ளி மாணவியுடன் ஏற்பட்ட நட்பு தொடர்ந்துள்ளது. ராஜா மாணவியிடம் தொடர்பில் இருப்பது மாணவியின் பெற்றோருக்கு கடந்த 16ஆம் தேதி தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் முன்னாள் ஆசிரியர் ராஜா மீது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று புகார் அளித்தனர். இது குறித்து உரிய விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஆரணி அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், ராஜா பள்ளியிலிருந்து சென்ற பின்பும் மாணவியுடனான தொடர்பினை நீட்டித்துவந்ததும் ஆரணியிலுள்ள அவரது வீட்டுக்கு அடிக்கடி வரும் ராஜா மாணவியைப் பெற்றோருக்குத் தெரியாமல் சந்தித்துப் பேசிவந்தும் தெரியவந்துள்ளது.

மேலும் கடந்த நான்கு ஆண்டுகளாக மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி தனக்குத் திருமணமானதை மறைத்துப் பேசிவந்ததும் தெரியவந்தது. இதையடுத்து காவல் துறையினர் ராஜா மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள ராஜாவைத் தேடிவருகின்றனர்.

Last Updated : Jun 22, 2021, 7:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details