திருவண்ணாமலை: வந்தவாசி அடுத்த தேசூரில் உள்ள ரேணுகாம்பாள் கோயில் முன்பாக உள்ள காலி இடத்தில், சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி மூலமாக 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நாடக மேடை அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணி இரண்டு நாட்களுக்கு முன்பாக நடைபெற்றுள்ளது.
கம்பிகள் கட்டி காலம் ஏற்படுத்தி சிமெண்ட் கலவை நிரப்பி கட்டடப் பணிகள் தொடங்கிய நிலையில், அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சீயமங்கலம், பருவதம்பூண்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பெற்றோர் வந்து, பள்ளி அருகே நாடக மேடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அப்போது, பெண்கள் பள்ளியின் வாசல் கதவு முன்பாக, நாடக மேடை அமைத்தால் மாணவிகள் எவ்வாறு வெளியே செல்வார்கள் என்று கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கு பள்ளி மேலாண்மை குழுத் தலைவர் சக்தி குமாரி, முன்னாள் தலைவர் ரவி உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால், கிராம நிர்வாக அலுவலர் முருகன் உடனே வந்து பணியை நிறுத்தும்படி கட்டிட தொழிலாளர்களிடம் கூறி உள்ளார்.
மேலும், இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தேசூர் பஞ்சாயத்து தலைவர் ராதா ஜெகவீர பாண்டியன், இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர். அதன்பின், பொதுமக்கள் திரும்பிச் சென்ற நிலையில், மாணவிகளின் பெற்றோரும் கலைந்து சென்றுள்ளனர்.
பின்னர் பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம் மற்றும் மாணவர்களின் பெற்றோர் சார்பில், தேசூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி நுழைவாயிலை அடைத்து கட்டப்படும் நாடக மேடையை தடை செய்யக் கோரி, மாவட்ட கலெக்டர் மற்றும் தாசில்தார் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பினர்.
இதைத் தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் பள்ளி நுழைவாயில் உட்பகுதியில் அமர்ந்தவாறு நாடக மேடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் மற்றும் தலைமை ஆசிரியர் வந்து, மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பின், மாணவர்கள் வகுப்புகளுக்குச் சென்றனர்.
இதையும் படிங்க:"பதவியைக்கூட இழக்கத் தயார்".. பட்டியலின பெண் தலைவி என்பதால் அந்தனூர் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு!