2016 முன் ஓய்வு பெற்றவர்களுக்கு புதிய மேட்ரிக்ஸின் அடிப்படையில் பலன்கள் வழங்கவேண்டும் - ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் திருவண்ணாமலை: தண்டராம்பட்டு சாலையில் உள்ள சமுத்திரம் பகுதியில் அமைந்துள்ள ராஜேந்திரன் மாளிகையில் ஓய்வு பெற்ற அரசு அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட பேரவைக் கூட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் உருத்திரப்பன் தலைமையில் நடைபெற்ற இந்த பேரவைக் கூட்டத்தில், மாவட்டம் முழுவதிலும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கம் சார்பில் ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பேரவைக் கூட்டம் நடைபெற்றது. அந்த வகையில், மத்திய அரசு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று 01.01.2016-க்கு முன் ஓய்வு பெற்றவர்களுக்கு அமல்படுத்தியபடி, தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் அனைவருக்கும் புதிய மேட்ரிக்ஸின் அடிப்படையில் பலன் பெறும் வகையில் உரிய ஆணை வெளியிட வேண்டும்.
70 வயது நிரம்பிய ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும், தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி கூடுதலாக ஓய்வூதியம் 10 சதவீதம் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் தொகுப்பு நிதி 40 சதவீதமாக உயர்த்தி வழங்கத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், ஓய்வூதியம் ஒப்படைப்பு பிடித்தம் செய்யும் காலத்தை 15 ஆண்டுகளில் இருந்து, 12 ஆண்டுகளாகக் குறைத்து உரிய ஆணை வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் புதிய மருத்துவ காப்பீடுத் திட்டம், உண்மையில் காசு இல்லாத மருத்துவம் என்பது ஓய்வூதியர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளதைக் கருத்தில் கொண்டு, ஓய்வூதியர்களைக் கட்டாயப்படுத்தி திட்டத்தில் சேர்க்கக் கூடாது.
வழங்கப்படாமல் முடக்கப்பட்ட 39 மாத அகவிலைப்படி நிலுவையை விரைவில் வழங்க உரிய அரசாணை வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.50 ஆயிரத்தில் இருந்து, ரூ.1 லட்சமாக உயர்த்தி ஆணை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9,000 ஆக நிர்ணயிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்த சங்கம் கேட்டுக் கொள்வதாகப் பேரவைக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கடலூர் காவலர்கள் கட்டிக்கொடுத்த கருணை இல்லம்.. தந்தையை இழந்த குடும்பத்திற்கு அன்புச்சீர்.. நெகிழ்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?