திருவண்ணாமலை: திமுக சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பாசறை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி முடிந்து சென்றவுடன் விழுப்புரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அப்போது கீழ்பென்னாத்தூர் அடுத்த வேட்டவலத்தில் தமிழ் மீட்சியே தமிழர் எழுச்சி என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய வாகனம் மூலம் விழுப்புரம் சாலை வழியாக வந்தார். வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
பின்னர், காவல் துறையினர் போக்குவரத்தை சரி செய்து சீமானை பத்திரமாக அனுப்பினர். சீமானின் வாகனம் போக்குவரத்து நெரிசல்களுக்குள் சிக்கிக் கொண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின் நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பொதுக் கூட்டத்தில் தமிழரின் சிறப்புகளையும், தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்தும் உரையாற்றி இலக்கிய கவிதைகளை சீமான் கூறினார். தொடர்ந்து அவர் கூறுகையில், "ஒரு நாட்டை அழிக்க வேண்டும் என்றால் படை எடுக்க வேண்டியது இல்லை. துப்பாக்கி, பீரங்கி, தோட்டாக்கள் தேவை இல்லை. ஒரு உயிர் சாக வேண்டியது இல்லை. ஒரு துளி ரத்தம் பூமியில் சிந்த வேண்டியது இல்லை அழித்துவிடலாம்.
அவனுடைய மொழியை அழித்துவிட்டால் அவனுடைய கலை, இலக்கியம், பண்பாடு அழிந்துவிடும். பண்பாடு அழிந்துவிட்டால் இனம் அழிந்து விடும். இனம் அழிந்து விட்டால், நாடு அழிந்து விடும் இதுதான் வரலாறு. மேலும் 90% மேலே உன் மொழி அழிந்துவிட்டது என்றும் திட்டமிட்டு திராவிடர்களால் மொழிப்பற்று, இனப்பற்று ஊட்டப்படாமல் சாதிப்பற்று, மதப்பற்று ஊட்டப்படுகிறது" என்று சீமான் கூறினார்.
நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்பாபு, தொழிற்சங்க மாநில தலைவர் அன்பு தென்னரசன், மண்டல செயலாளர் கணேசன், மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பிரகலதா, மாவட்ட தலைவர் பாண்டியன், செயலாளர் இளவரசன் உட்பட மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை, பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:தலைமை ஆசிரியர் தம்பதி கொலை வழக்கு.. ஒருவர் கைது! கடன் கேட்டு தராத ஆத்திரத்தில் கொலையா? போலீசார் விசாரணை!