பசும் பாலை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள் கைது - ஆவின் நிர்வாகம்
திருவண்ணாமலை: இரத்தத்தை வியர்வையாக சிந்தி உற்பத்தி செய்யும் பாலுக்கு உரிய விலை கிடைக்காததால் பசும் பாலை தரையில் ஊற்றி ஆர்ப்பாட்டம் செய்த விவசாயிகள் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், மேல்பள்ளிப்பட்டு பால் உற்பத்தியாளர் சிறு விவசாயிகள் சங்கம் சார்பில் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செங்கம் பகுதி முழுவதும் பெரும்பாலான விவசாயிகள் கறவைமாடுகள் வைத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். மேலும் அதிகளவு பால் உற்பத்தி செய்யப்படும் பகுதியாகவும் இருந்து வருகிறது.
தற்போது கரோனா தொற்று முன்னெச்சரிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளதால், பொதுமக்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இந்த நிலையில் கறவை மாடுகளையே நம்பி பிழைப்பு நடத்திவரும் விவசாயிகளுக்கு பாலிற்கு உரிய விலை கிடைக்காமலும், உற்பத்தி செய்யப்படுகின்ற பாலை மீண்டும் விவசாயிகளிடமே திருப்பி கொடுப்பதால் பாதிப்பிற்குள்ளான விவசாயிகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பால் உற்பத்தியாளர்கள் ஒரு லிட்டருக்கு கொள்முதல் விலை ரூ.35 நிர்ணயம் செய்திட வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆவின் நிர்வாகம் இதில் தலையிட்டு பாலின் விலையை உயர்த்தி, உற்பத்தியாளர்களிடம் பாலை திரும்ப அளிக்காமல் கொள்முதல் செய்யவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை செங்கம் காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.