திருவண்ணாமலை: ஆரணியை அடுத்த ஜெயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் புவனேஷ் குமார் (29). இவர் கடந்த இரு ஆண்டுகளாக திருவண்ணாமலை மாவட்ட ஆரணி நகர தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் கடந்த 30ஆம் தேதி, பாண்டி பஜார் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதன்படி புவனேஷ்குமார் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திருவண்ணாமலை ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட, சென்னை பெரம்பூரைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் விஜயராமனை அணுகி எம்எல்ஏ சீட் கேட்டுள்ளார்.
எம்.எல்.ஏ சீட்டுக்கு ரூ. 50 லட்சம் பணம்
அப்போதைய தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான கிஷன் ரெட்டியின் நெருங்கிய உதவியாளர் நரோத்தமன், அவரது தந்தை சிட்டிபாபு, பாலாஜி ஆகியோரிடம் விஜயராமன் எம்எல்ஏ சீட் குறித்து கேட்டுள்ளார்.
இவர்கள் நால்வரும் எம்.எல்.ஏ சீட் வாங்கி தருவதாக உறுதியளித்து ரூ.1 கோடி பணம் கேட்டுள்ளனர்.
வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாததால் ஏமாற்றம்
இதனை நம்பிய புவனேஷ் குமார், முதல் தவணையாக ரூ.50 லட்சத்தை விஜயராமன், நரோத்தமன் ஆகியோரிடம் தி.நகரில் உள்ள தனியார் விடுதியில் வைத்து கொடுத்ததாக கூறப்படுகிறது.
பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டவுடன், மீதம் ரூ. 50 லட்சத்தை தருவதாக புவனேஷ் குமார் கூறியுள்ளார். பின்னர் வேட்பாளர்கள் பட்டியலில் புவனேஷ்குமார் பெயர் வராதது குறித்து, நால்வரும் மழுப்பலாக பதில் அளித்துள்ளனர்.
வாங்கிய பணத்தையும் திருப்பி தராமல் இழுத்தடித்துள்ளனர். இது குறித்து குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தமிழ்நாடு பாஜக தலைமை என புவனேஷ்குமார் முறையிட்டும், முறையான பதில் கிடைக்கவில்லை.
நடவடிக்கை எடுக்கக்கோரி புகார்
இதையடுத்து, தற்போது புவனேஷ்குமார், தி.நகர் துணை ஆணையர் ஹரி கிரன் பிரசாத்திடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து பாண்டி பஜார் காவல் நிலைய காவலர்கள் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.
இதன் பேரில் நரோத்தமன், விஜயராமன் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இருவருக்கும் உடல்நிலை சரியில்லாததால் ஆஜராகவில்லை.
தற்போது மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட, இந்தப் புகாரின் முகாந்திரம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக ரூ.50 லட்சம் பணம் கைமாறியதாக கூறப்படும் தனியார் விடுதி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பொள்ளாச்சி பாலியல் வழக்கு: கைதானவரின் பிணை மனு தள்ளுபடி