தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவண்ணாமலை விவசாயிகள் 6 பேர் மீதான குண்டர் தடுப்புச் சட்டம் ரத்து.. ஒருவர் மீது தொடரும் வழக்கு.. முதலமைச்சரின் விளக்கம் என்ன?

Tiruvannamalai SIPCOT protest: திருவண்ணாமலையில் சிப்காட் தொழிற்பேட்டை நிறுவுவதற்காக நிலம் கையகப்படுத்தும் செயலை எதிர்த்து ஆட்சியர் போராட்டத்தில் ஈடுபட்ட 7 விவசாயிகளைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் அதில் 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு க ஸ்டாலின்
முதலமைச்சர் மு க ஸ்டாலின்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 17, 2023, 9:51 PM IST

இது தொடர்பாக முதலமைச்சர் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, "திருவண்ணாமலை மாவட்டம். செய்யார் வட்டத்தில் முதற்கட்டமாக 645 ஹெக்டர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா துவங்கப்பட்டது. தற்போது, இதில் 13 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 27,432 நபர்கள் நேரடியாகவும், 75,000 நபர்கள் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். இதே பகுதியில் இரண்டாம் கட்டமாக 2300 ஹெக்டர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டது தற்போது. இதில் 55 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 31,645 நபர்கள் நேரடியாகவும், 1,00,000 நபர்கள் மறைமுகமாகவும் பயன்பெற்று வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் பெரிய அளவில் தொழிற்சாலைகள் ஏதுமில்லாத நிலையில், மேற்குறிப்பிட்ட சிப்காட் தொழிற்பூங்கா அமைக்கப்பட்டதன் விளைவாக, செய்யார் மற்றும் வெம்பாக்கம் ஆகிய வட்டங்களை சேர்ந்த அதிக அளவிலான மக்கள் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர். குறிப்பாக, பல கிராமங்களைச் சார்ந்த அடித்தட்டு மக்களுக்கும், மகளிருக்கும் அதிக அளவில் வேலை வாய்ப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இத்தொழிற்பூங்கா அமைக்கப்பட்டதன் காரணமாக, இப்பகுதியைச் சேர்ந்தவர்களின் குடும்பங்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற்று வாழ்ந்து வருகிறார்கள்.

மேற்குறிப்பிட்ட சிப்காட் தொழிற்பூங்கா வெற்றிகரமாக செயல்பட்டதன் விளைவாகவும், இப்பகுதியில் சிப்காட் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பெருமளவிலான பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும் சிப்காட் பகுதி-3 தொழிற்பூங்காவினை அமைக்கும்பொருட்டு, உரிய ஆணைகள் தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டன. இதில் செய்யார் வட்டத்தில் மேல்மா மற்றும் அதனைச் சுற்றியுள்ள 8 கிராமங்களில் உள்ள 3,174 ஏக்கர் அளவிற்கு நிலஎடுப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள 3,174 ஏக்கர் பரப்பில், 7 ஏக்கர் மட்டுமே நஞ்சை நிலமாகும்.

தற்போது 1,200 ஏக்கர் அளவிற்கு நிலஎடுப்பிற்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. இதில் நஞ்சை நிலம் ஏதுமில்லை. மேலும், அறிவிப்பு கடிதம் அளிக்கப்பட்டதில், நில எடுப்பு செய்ய உத்தேசித்துள்ள, 1881 நில உரிமையாளர்களில், 239 நில உரிமையாளர்கள் மட்டுமே ஆட்சேபணை மனுக்களை அளித்துள்ளனர். சிப்காட் விரிவாக்கத்தின் மூலம் இப்பகுதியில் தொழில் வளர்ச்சி பெருகுவதோடு, அங்குள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்ற நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் செய்யார் வட்டம், மேல்மா கிராமத்தில் உள்ள பட்டா நிலத்தில். தேத்துறை கிராமத்தை சேர்ந்த மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பச்சையப்பன் என்பவர் தலைமையில் தென்னங்கீற்று கொட்டகை அமைத்து, கடந்த 02.07.2023-ஆம் தேதி முதல் தினசரி சுமார் 15 முதல் 20 நபர்களை கொண்டு தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்தனர்.

அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது, அடிக்கடி சாலை மறியலில் ஈடுபட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது. நில எடுப்பு செய்ய தானாக முன்வந்து சம்மதம் தெரிவித்த பொதுமக்களைத் தடுத்து நிறுத்தியது. பணி செய்த காவலர்களை தாக்கியது. பொது உடமைகளை சேதப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டதன் காரணமாக, கடந்த 04.11.2023 அன்று மேல்மா சிப்காட் விவசாயிகள் எதிர்ப்பு இயக்க நிர்வாகி கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் மற்றும் 19 நபர்கள் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.

இதில் ஏற்கெனவே அதிக வழக்குகளில் அதிக வழக்குகளில் தொடர்புடைய, அருள் மற்றும் 6 நபர்களை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவரால் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர்.

செய்யார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டு இந்த நில எடுப்பு வருவதால், குண்டர் சட்டத்தின் கீழ் கைதான பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி மற்றும் பாக்கியராஜ் ஆகியோரின் குடும்பத்தினர் செய்யார் சட்டமன்ற உறுப்பினரை இன்று (17-11-2023) நேரில் சந்தித்து, மேற்படி நபர்களை விடுவிக்க கோரிக்கை வைத்தனர். இன்று மாலை, கைது செய்யப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்கள் செய்யார் சட்டமன்ற உறுப்பினருடன் வந்து, பொதுப்பணித் துறை அமைச்சரை நேரில் சந்தித்து, தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர்.

இவர்கள் அளித்த மனுக்களில், வருங்காலங்களில் இது போன்று அரசு திட்டங்களைக் காரணமில்லாமல் எதிர்க்க மாட்டோம் என்றும், இத்தகைய தவறுகளை வெளியாட்களின் தூண்டுதலின் பேரில் செய்துவிட்டோம் என்றும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகளைச் செய்யமாட்டோம் என்றும் தெரிவித்து தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை விடுவிக்குமாறும் கோரிக்கை வைத்தனர்.

பொதுப்பணித் துறை அமைச்சர், அவர்களின் கோரிக்கை மனுக்களை முதலமைச்சர் அவர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு சென்று பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், செய்யார் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு, சட்டம்-ஒழுங்கிற்கு குந்தகம் விளைவித்து, பொதுச்சொத்திற்கு சேதம் விளைவித்ததன் காரணமாக, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள பச்சையப்பன், தேவன், சோழன், திருமால், மாசிலாமணி, பாக்கியராஜ் ஆகியோர் குடும்பத்தினரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலனை செய்து, அவர்களை குண்டர் தடுப்புச் நடவடிக்கையிலிருந்து விடுவிக்க ஆணையிட்டுள்ளார்கள். அதனடிப்படையில், மேற்குறிப்பிட்டுள்ள 6 நபர்களின் மேல் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த குண்டர் தடுப்புச் சட்ட ஆணை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம்: 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை பணிகள் துவங்கியதாக தமிழக அரசு தகவல்

ABOUT THE AUTHOR

...view details