தொழு நோயாளிகளின் தோழன் - 21 ஆண்டுகளாக ஆதரவற்ற உடல்களை அடக்கம் செய்யும் மணிமாறன்! திருவண்ணாமலை :தலையாம்பள்ளம் கிராமத்தில் பிறந்தவர், மணிவண்ணன். ஆதரவற்ற தொழுநோயாளிகள், பாதிக்கப்பட்ட முதியவர்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டப் பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்கள் இயற்கை எய்தி விட்டால், அவர்களது உடல்கள் அரசு மருத்துவமனைகளில் கேட்பாரற்று பல நாட்கள் இருக்கும். அதனை எவரும் பெற முன்வர மாட்டார்கள். அவ்வாறு பரிதாபத்துக்குரிய நிலையில் இருக்கும் உடல்களை காவல்துறை அனுமதி உடன் பெற்று நல்லடக்கம் செய்வதே இவரது பணி.
16 வயதில் தனது சமூகப் பணியைத் துவக்கிய மணிவண்ணன். கடந்த 21ஆண்டுகளாக தொய்வின்றி இந்த பணியினை சமூக அர்ப்பணிப்பு மனதுடன் செய்து வருகிறார். தற்போது இவரது வயது 37. கடந்த 21 ஆண்டுகளில் இவர் 2045 ஆதரவற்ற உடல்களை நல்லடக்கம் செய்து உள்ளார்.
இவரது சேவையைப் பாராட்டி மத்திய, மாநில அரசுகள் விருதுகள் வழங்கி உள்ளன. பல மாநில முதலமைச்சர்கள் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கியுள்ளனர். உலக சாதனையாளர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ள இவரது சேவையைப் பாராட்டி மறைந்த குடியரசுத் தலைவர் ஜனாதிபதி அப்துல் கலாம் உள்ளிட்டப் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
மணிமாறனின் சேவையை அறிந்த நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் ஜூன் 22ஆம் தேதி அவரை பாராட்டி அவரின் சேவை தடையின்றி தொடரும் வகையில் ஒரு ஆம்புலன்ஸை வழங்கி, தொடர்ந்து மக்கள் சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இத்தகைய சமூக சேவையை தொடர்ந்து செய்துவரும் சமூக ஆர்வலர் மணிமாறன் கூறுகையில், '' நடிகர் ரஜினிகாந்த் அழைத்து வாகனத்தினைப் பரிசளித்தது, எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. தான் செய்யும் சேவைக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உத்வேகத்தையும் இந்த நிகழ்வு எனக்கு அளிக்கிறத.
நடிகர் ரஜினிகாந்த் அளித்த அந்த ஆம்புலன்ஸ் வாகனத்தின் மூலம் கடந்த சில வாரம் முன்பு ஆதரவு இல்லாமல் இறந்த இஸ்லாமிய இளைஞரின் உடலைப் பெற்று 2046ஆவது உடலாக வேலூர் மாவட்டத்தில் அடக்கம் செய்துள்ளேன்.
இறந்தவர் உடல் மட்டுமின்றி, வறுமையால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்கு செல்ல முடியாதவர்களுக்கும் இந்த வாகனம் உதவும். இந்த சேவையினை திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் தான் வருங்காலத்தில் செய்ய உள்ளேன்'' என மணிமாறன் தெரிவித்தார்.
இவரது சேவையின் ஒரு பகுதியாக இன்று காலை திருவண்ணாமலை அடுத்த மல்லவாடி அரசு தொழுநோயாளிகள் இல்லத்தில் மணிமாறன் தொழுநோயால் பாதிக்கப்பட்ட 40 நபர்களுக்கு பாய், புடவை, வேட்டி, போர்வை மற்றும் அன்னதானத்தை வழங்கி, மேலும் இரண்டு பசுமாடுகள் மற்றும் ஒரு ஆட்டை தானமாக வழங்கியுள்ளார்.
தனது சேவைக்குப் பின்னால் பலரது உழைப்பு உள்ளதாகவும்; அந்த உழைப்பு தான் தன்னை மேலும் மேலும் சேவையை செய்ய ஊக்கப்படுத்தி வருவதாகவும் மணிமாறன் தெரிவித்தார்.
இதையும் படிங்க :தாய் பாசத்தில் மனிதர்களை மிஞ்சும் குரங்கு... பூனையை வளர்க்கும் குரங்கின் வீடியோ வைரல்!