திருவண்ணாமலை:அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல் 49 லட்சம் ரூபாய் செலவில் இறந்த யானைக்கு மணி மண்டபம் கட்டுவது எந்த வகையில் நியாயம் என விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.
மேலும், பவுர்ணமி நாளை தவிர்த்து பிற நாட்களில் கழிப்பறைகள் மற்றும் குடிநீர் சுத்திகரிக்கப்பட்ட நிலையங்கள் மூடி கிடப்பதால் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் அடிப்படை வசதி கிடைக்காமல் அவதிப்படுகின்றனர் என்றும் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் கிடைக்க வழிவகை செய்திட வேண்டும் என்றும் விஷ்வ இந்து பரிஷத் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் சங்கத்தின் சார்பில் நேற்று செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மாவட்ட செயலாளர் ஏழுமலை பேசுகையில், "அண்ணாமலையார் கோயிலில் இதுவரை மூன்று யானைகள் இறந்து உள்ள நிலையில் தற்போது நான்காவது யானையாக ’ருக்கு’ இறந்து விட்டது. இதற்கு மட்டும் ஏன் 49 லட்ச ரூபாய் செலவில் மணிமண்டபம் அமைக்க வேண்டும்?.
அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் ஆங்காங்கே போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தி செல்வதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் பக்தர்களுக்கான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்றவை அனைத்து நாட்களும் கிடைக்க வழிவகை செய்திட வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் இதுவரை அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.