திருவண்ணாமலை: உலக பிரசித்தி பெற்ற பஞ்ச பூத தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ஆம் தேதி அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 9 நாட்களும் பல்வேறு வாகனத்தில் காலையிலும் இரவிலும் வெகு விமர்சையாக நடைபெற்று பஞ்சமூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்றது.
10 ஆம் நாளான இன்று (டிச. 6) அதிகாலை அண்ணாமலையார் கோயில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து 4 மணியளவில் அண்ணாமலையார் கருவறை முன்பாக ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தை விளக்கும் விதமாக கோயிலின் கருவறையில் இருந்து கொண்டு வரப்பட்ட தீபத்தினை கொண்டு ஐந்து மடக்குகளில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.
அண்ணாமலையார் கருவறையில் ஏற்றப்பட்ட இந்த பரணி தீபத்தினை சிவாச்சாரியர்கள் ஊர்வலமாக கொண்டு சென்று கோயிலில் உள்ள அம்மன் சன்னதி, விநாயகர் சன்னதி, முருகர் சன்னதி உள்ளிட்ட மற்ற சன்னதிகளில் பரணி தீபத்தினை ஏற்றினர்.