இந்த ஆண்டிற்கான அக்னி நட்சத்திரம், கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. இந்த அக்னி நட்சத்திரத்தில் அக்னியின் உச்சத்தினைக் குறைத்து, நாட்டில் மழைப் பொழிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையாருக்கு தாரா பாத்திரத்தில் பன்னீர், பச்சைக் கற்பூரம், வெட்டிவேர் மற்றும் பல்வேறு வகையான மூலிகைகளால் நீர் நிரப்பப்பட்டு சிவலிங்கத்தின் தலை உச்சியில், தாரா பாத்திரமானது கட்டப்பட்டு, அதிலிருந்து சொட்டு சொட்டாக சிவலிங்கத்தின் மீது மூலிகை நீர் படும்படி செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் அக்னி நட்சத்திரம் இன்று 28ஆம் தேதியான இன்று நிறைவு பெறுவதினையொட்டி, அண்ணாமலையார் சந்நிதி அருகே புனிதநீர் கொண்டு, 108 சிறப்புக் கலசங்கள் அமைக்கப்பட்டு, முதல் கால யாகசாலையுடன் தொடங்கிய சிறப்புப் பூஜையானது, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, அக்னி தோஷ நிவர்த்தி பூஜை தொடங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நிறைவு நாளான இன்று, இரண்டு மற்றும் மூன்றாம், நான்காம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று, பூர்ணாஹீதி வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து உச்சி காலவேளையில், யாகசாலையில் இருந்து புனித நீர் திருக்கோயிலில் ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முன்செல்ல கொண்டுவரப்பட்டு, பின்னர் அண்ணாமலையாருக்கும், உண்ணாமலையம்மனுக்கும் 108 கலசங்களிலிருந்து புனித நீரினை ஊற்றி, அக்னி தோஷ நிவர்த்தி பூஜை நிறைவுபெற்றது.
தற்போது கரோனா வைரஸ் தாக்கத்தால், அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ள நிலையில், அண்ணாமலையார் திருக்கோயில் சிவாச்சாரியார்கள் மட்டும் கலந்துகொண்டு, சகல ஜீவ ராசிகளும் இன்புற்று வாழ, அக்னி தோஷ நிவர்த்தி யாகபூஜையினை செய்தனர்.