திருவண்ணாமலை:செய்யாறு கிராமத்தில் தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வரும் விஆர்எஸ் ஃபண்ட் நிறுவனம் தீபாவளி ஃபண்ட், பொங்கல் ஃபண்ட் என பெயரில் மளிகை சாமான்கள், வீட்டு உபயோக பொருட்கள், தங்க காசுகள், வெள்ளி காசுகள் உள்ளிட்டவை தருவதாக தெரிவித்து தவணை முறை திட்டம் தொடங்கி திருவண்ணாமலை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏஜெண்டுகள் மூலம் பல லட்சம் பேரிடம் இருந்து சுமார் ரூபாய் 1000 கோடிக்கு மேல் பணம் வசூல் செய்துள்ளனர்.
தீபாவளி முடிந்த நிலையில் தவணை முறையில் பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் சம்சு மொய்தீன் கடந்த சில மாதங்களாக தலைமறைவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் ஏஜென்ட்கள் செய்யாற்றில் உள்ள நிறுவனத்தில் போராட்டம் நடத்தியும் காவல்துறையில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.