திருவண்ணாமலை: தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முதல் நாளன்று திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் உள்ள அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அருணை பொறியியல் கல்லூரி, அருணை பார்மஸி கல்லூரி, ஜீவா வேலு பன்னாட்டு பள்ளி, அருணை செவிலியர் கல்லூரி மற்றும் மெட்ரிக் பள்ளி, குமரன் பாலிடெக்னிக் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
மேலும் அமைச்சருக்குச் சொந்தமான 30 கார்களிலிலும் 3 பேருந்துகளிலும் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நவ 3ஆம் தேதி அதிகாலை 7 மணிக்கு மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் சோதனை துவங்கியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான அருணை கட்டுமான நிறுவனத்தில் சோதனை நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று திருவண்ணாமலை கீழ் நாச்சிபட்டு பகுதியில் உள்ள கஜலட்சுமி நகரில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் இரண்டாவது மகன் எ.வ.வே.கம்பனின் வீட்டில் இரண்டு கார்களில் 5க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.