செங்கம் அருகே அரசின் சிறப்பு மருத்துவ முகாம் - Department of Public Health and Immunization
திருவண்ணாமலை: செங்கம் அருகே பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்ரவந்தவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் தமிழ்நாடு அரசின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமில் மேல்ராவந்தவாடி, கரிமலைபாடி, கட்டமடவு ராமாபுரம் உள்ளிட்ட சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
தமிழ்நாட்டில் தற்போது கரோனா தாக்கம் அதிகரித்துவரும் வேளையில் ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் வெளியே செல்ல அவதிப்பட்டுவருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன்கருதி சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
வட்டார மருத்துவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் 10-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், 50-க்கும் மேற்பட்ட செவிலியர், உதவியாளர்கள் என சுமார் 80-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் பங்குபெற்றனர்.
இந்த முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், நீரிழிவு நோய், காச நோய், இதய நோய், முதியவர்களுக்குத் தேவையான ரத்த பரிசோதனை, ரத்த வகையைக் கண்டறிதல், கர்ப்பிணிகளுக்கு முழு பரிசோதனை செய்யப்பட்டு அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மேல் ராவந்தவாடி ஊராட்சி, அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மருத்துவ முகாமில் மருத்துவப் பரிசோதனை, சிகிச்சைப் பெற்று பயனடைந்தனர்.