திருவண்ணாமலை:தமிழக அரசு எந்த கோப்புகளை அனுப்பினாலும், அதனை திருப்பி அனுப்புவதையே கவர்னர் வாடிக்கையாக வைத்து உள்ளார். அமல்படுத்தப்படும் திட்டங்களுக்கு மாநில அரசும், மத்திய அரசும் ஒன்றிணைந்து செயல்படுவது தான் தமிழக அரசின் நோக்கம் என்றும் மாநில உரிமைக்காக எப்பொழுதும் கொள்கைகளை விட்டு தர மாட்டோம் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள செங்கம் சாலை சந்திப்பில், திருவண்ணாமலை மேற்கு காவல் நிலையத்தை புதிதாக இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார். பின்னர் மரக்கன்றுகளை நட்டு, கிரிவலப் பாதையில் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட ஏதுவாக இருசக்கர ரோந்து வாகன பணிகளையும் பொதுப்பணித்துறை அமைச்சர் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் வடக்கு மண்டல ஐஜி கண்ணன், வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அண்ணாதுரை, மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இதனையடுத்து செய்தியாளருக்கு பேட்டியளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது, "திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் நான்காவது காவல் நிலையமாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் ஒப்புதலுடன், இந்த காவல் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ள காரணத்தினால் தான் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய அதிகளவில் வருகின்றனர். திமுக ஆட்சியில் தான் காவல்துறைக்காக மூன்று ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.